கப்பலை திருப்பியனுப்பினாலும் நஷ்டஈடாக 7 மில்லியன் டொலர் வழங்க வேண்டுமென சீன தூதரகம் தெரிவித்துள்ளது - துஷார இந்துனில் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 27, 2021

கப்பலை திருப்பியனுப்பினாலும் நஷ்டஈடாக 7 மில்லியன் டொலர் வழங்க வேண்டுமென சீன தூதரகம் தெரிவித்துள்ளது - துஷார இந்துனில்

(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட தரம் குறைந்த உரத்தை திருப்பியனுப்பினாலும் அதற்கான நஷ்டஈடாக 7 மில்லியன் டொலர் வழங்க வேண்டும் என சீன தூதரகம் தெரிவித்திருக்கின்றது. அதனால் அரசாங்கம் திருப்பி அனுப்பிய கழிவுப் பொருட்கள் அடங்கிய உரத்தை மீண்டும் நாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துவருகின்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கமத்தொழில் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றின் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்குவதாகவே அரசாங்கம் தெரிவித்திருந்தது. ஆனால் இன்று பணம் கொடுத்து வாங்கவும் உரம் இல்லை. இரசாயன உரத்துக்கு திடீரென தடை விதித்ததாலே இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது.

அரசாங்கத்தின் பிழையான தீர்மானம் காரணமாக விவசாயிகளுக்கு இன்று விவசாயம் விரக்தியாகி இருக்கின்றது. விவசாயத்தை பாதுகாப்பதற்காக நிமிர்த்தி வைக்கும் உருவ பொம்மையை அவர்கள் எரித்து வருகின்றனர்.

ஆனால் அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயை நிமிர்த்தி வைத்திருக்கின்றது. அதனால் அமைச்சரின் உருவ பொம்மையை விவசாயிகள் எரித்து வருகின்றனர்.

அத்துடன் சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட உரம் தரம் அற்றது என தெரிவித்து 3 முறை தர நிர்ணய சபை அதனை நிராகரித்ததால் குறித்த சீன உர கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது. என்றாலும் குறித்த கப்பல் இன்னும் எமது நாட்டை சுற்று வந்துகொண்டிருக்கின்றது.

குறித்த உரத்தை பெற்றுக் கொண்டாலும் இல்லாவிட்டாலும் நஷ்டஈடாக 7 டொலர் மில்லியன் வழங்க வேண்டும் என சீன தூதரகம் தெரிவித்திருக்கின்றது. அதனால் அரசாங்கம் திருப்பி அனுப்பிய உரக் கப்பலை மீண்டும் நாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துவருகின்றது.

மேலும் அரசாங்கம் விவசாயிகளுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியே ஆட்சிக்கு வந்தது. வாக்குறுதி அளித்த எதனையும் அரசாங்கம் விவசாயிகளுக்கு செய்யவில்லை. இரசாயன உரத்தை தடை செய்ததன் விளைவாக எதிர்வரும் மார்ச், ஏப்ரல் மாதமாகும்போது நாட்டில் பாரியளவில் உற்பத்தி வீழ்ச்சியடையும். எனவே அரசாங்கம் தடை செய்த இரசாயன உரத்தை மீண்டும் அனுமதியளிக்க வர்த்தமானி அறிவிப்பை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment