அரசாங்கத்தின் நாடகத்தினால் நாடு வெகுவிரைவில் உணவுப் பஞ்சத்திற்கு முகங்கொடுக்கும் - ஜே.சி.அலவத்துவல - News View

About Us

About Us

Breaking

Saturday, November 27, 2021

அரசாங்கத்தின் நாடகத்தினால் நாடு வெகுவிரைவில் உணவுப் பஞ்சத்திற்கு முகங்கொடுக்கும் - ஜே.சி.அலவத்துவல

(நா.தனுஜா)

விவசாயிகளுக்கு உரத்தை இலவசமாக வழங்குவதாக ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின்போது கூறிய அரசாங்கம், தற்போது உர இறக்குமதியிலிருந்து முழுமையாக விலகிக் கொண்டிருக்கின்றது. உரத்தை இறக்குமதி செய்வதற்குத் தனியார் துறையினரிடம் போதியளவு டொலர் இல்லாத நிலையில், வெகுவிரைவில் அவற்றின் விலைகள் பன்மடங்காக அதிகரிக்கும். இவற்றின் விளைவாக அடுத்த வருடம் நாடு மிக மோசமான உணவுப் பஞ்சத்திற்கு முகங்கொடுக்கும் நிலையேற்பட்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின்போது உரத்தை இலவசமாக வழங்குவதாகக் கூறிய கோட்டாபய ராஜபக்ஷவினால் இரசாயன உரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட எவ்வித விஞ்ஞானபூர்வ அடிப்படைகளுமற்ற தீர்மானத்தின் விளைவாக நாடளாவிய ரீதியில் விவசாயிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதுடன் மாத்திரமன்றி முக்கிய பயிர்ச் செய்கை உற்பத்திகள் வீழ்ச்சியடைந்திருக்கின்றன.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் இரசாயன உர இறக்குமதிக்குத் தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நீக்கப்பட்டு, அரசாங்கத்தினால் அரங்கேற்றப்பட்ட இந்த நாடகம் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

இருப்பினும் அந்நாடகத்தின் விளைவாக நாடு வெகுவிரைவில் உணவுப் பஞ்சத்திற்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையிலிருக்கின்றது. இதன் பிரதிபலனை 2022 ஏப்ரல் மாதம் வரவிருக்கும் தமிழ், சிங்களப் புது வருடப் பிறப்பின்போது நன்கு உணர்ந்துகொள்ள முடியும்.

அதேவேளை தற்போது அரசாங்கம் இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதற்குத் தனியார் துறையினருக்கு மாத்திரம் அனுமதி வழங்கியிருக்கின்றது. நாட்டில் டொலருக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், உரத்தை இறக்குமதி செய்வதற்குத் தேவையான டொலரை அரசாங்கம் வழங்குமா?

குறிப்பாக தேயிலைப் பயிர்ச் செய்கையின் ஊடாக நாட்டிற்கு பெருந்தொகையான டொலர்கள் உட்பாய்ச்சலடைந்த நிலையில், உரப் பற்றாக்குறை காரணமாகத் தேயிலைப் பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் நாட்டிற்கான டொலர் உட்பாய்ச்சலில் பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் தீர்மானங்களால் நாட்டின் பொருளாதாரத்திற்கும் விவசாயிகள் மற்றும் பயிர்ச் செய்கையாளர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் சேதத்திற்குப் பொறுப்புக்கூறப்போவது யார்?

அதுமாத்திரமன்றி இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதற்கான அனுமதி உரிய நேரத்தில் வழங்கப்படாததன் காரணமாக இன்றளவிலே உரத்தை இறக்குமதி செய்வதில் பல்வேறு நெருக்கடிகள் காணப்படுகின்றன. அதனால் அவற்றின் விலைகள் முன்னைய விலைகளை விடவும் பன்மடங்காக அதிகரிப்பதற்கான சாத்தியப்பாடுகள் உயர்வாக உள்ளன.

ஆகவே இரசாயன உர இறக்குமதியை அனுமதிப்பதற்குக் காலந்தாழ்த்தி மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினால் விவசாயிகளுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை என்று சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment