அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் மக்களை ஏமாற்றும் பொய்கள் மட்டமே முன்வைக்கப்படும் : மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளையும் சர்வதேச அழுத்தங்களையும் எதிர்கொள்ள நேரிடும் - அனுரகுமார திசாநாயக - News View

About Us

About Us

Breaking

Friday, November 5, 2021

அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் மக்களை ஏமாற்றும் பொய்கள் மட்டமே முன்வைக்கப்படும் : மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளையும் சர்வதேச அழுத்தங்களையும் எதிர்கொள்ள நேரிடும் - அனுரகுமார திசாநாயக

(ஆர்.யசி)

அடுத்த வாரம் முன்வைக்கப்படவுள்ள அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் மக்களை ஏமாற்றும் பொய்கள் மட்டமே சபையில் முன்வைக்கப்படும். ஆனால் வெகு விரைவில் பொருளாதார ரீதியாகவும், சர்வதேச ஆக்கிரமிப்பு சார்ந்த அழுத்தங்கள் மற்றும் பாரிய நெருக்கடி நிலைமைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.

நாட்டின் மின்சார நெருக்கடி நிலைமைகள் குறித்த கருத்துக்கள், மின் நிலைய சர்ச்சைகள் குறித்தும் நாட்டின் நிகழ்கால அரசியல் நெருக்கடிகள் குறித்தும் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், மிகப்பெரிய நெருக்கடி நிலையொன்று நாட்டில் உருவாகியுள்ளது. பொருளாதார ரீதியிலும், தேசிய பாதுகாப்பு ரீதியிலும், நோய்த் தாக்கங்கள் போன்ற தொற்று நோய்கள் காரணமாகவும் பல பிரச்சினைகள் நாட்டில் எழுந்துள்ளன. இவற்றை அரசாங்கம் கையாள்வதில் பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ளது என்பதும் வெளிப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு, இறக்குமதி பொருட்களை தேவைக்கேற்ப இறக்குமதி செய்ய முடியாத நிதி பற்றாக்குறை, உரம் மற்றும் மருத்துகளை இறக்குமதி செய்ய முடியாத நிலை, தரமான பொருட்களுக்கு பதிலாக மோசமான மற்றும் நாட்டுக்கும் மக்களுக்கும் ஒவ்வாத பொருட்களை இறக்குமதி செய்யும் நிலை என பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன.

எனினும் இவற்றை நிராகரித்து சுயாதீனமாக தீர்மானம் எடுக்க முடியாத இடத்திற்கு இலங்கை அரசாங்கம் இன்று தள்ளப்பட்டுள்ளது. சர்வதேசத்தின் அழுத்தமும், ஆதிக்கமுமே இதற்கு காரணமாகும்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம், போர்ட் சிட்டி, கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதி, மத்தள விமான நிலையம் ஆகியவற்றை சீனா ஆக்கிரமித்துள்ளது.

திருகோணமலை எண்ணெய் குதங்கள், கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை, கெரவலபிட்டிய மின் நிலையத்தின் எரிவாயு பரிவர்த்தனை ஆகியவற்றை இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றன. இவற்றை கையாள தெரியாது அரசாங்கம் இலங்கையின் வளங்களை தாரைவார்த்துக் கொண்டுள்ளது.

வெளிநாட்டுக் கொள்கை முறையாக பின்பற்றப்பட வேண்டும், ஆனால் ஒரு நாட்டின் ஆதிக்கம் முழுமையாக இருக்கும் விதமாகவோ அல்லது ஏனைய நாடுகளை பகைத்துக் கொள்ளும் விதத்திலோ கொள்கைகளை கையாளக்கூடாது.

அதேபோல் நாடுகளை திருப்திப்படுத்த, கடன்களை பெற்றுக் கொள்ள இலங்கையின் வளங்களை விற்கவும் கூடாது. இது முறையான வெளிநாட்டுக் கொள்கை அல்ல.

இது தொடர்ந்தால் இறுதியாக இலங்கை என்ற நாடே மிஞ்சாது. அதுமட்டுமல்ல நாட்டின் வளங்களை கைப்பற்றும் நாடுகளே நாளை இலங்கையின் அரசியல் மாற்றத்தையும் தீர்மானிக்கும். அதற்கு இடம் வழங்கப்படக் கூடாது. ஆனால் அரசாங்கம் இவற்றை கருத்தில் கொள்வதாக தெரியவில்லை.

மேலும், அடுத்த வாரம் அரசாங்கம் தமது வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளனர். இதில் மக்களுக்கு பல சலுகைகளை வழங்குவதாக அரசாங்கம் கூறுகின்றது. அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் வரிகளை விளக்கியது, இதனால் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய பரிய தொகை கிடைக்காது போனது. இது யாருடைய கைகளுக்கு சென்றது என்பது தெரியவில்லை.

ஆனால் நாடாக இன்று பாரிய பொருளாதார நெருக்கடியில் உள்ளோம். மக்களின் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள அரசாங்கத்திடம் நிதி இல்லை. டொலர் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது. வெளிநாட்டு பணியாளர்களின் மூலமாக கிடைக்க வேண்டிய பாரிய அளவு நிதி இல்லாது போயுள்ளது. ஆகவே இவ்வாறான நிலையில் நாட்டில் அளவுக்கு அதிகமாக பணத்தை அச்சடித்து நிலைமைகளை கையாளவே அரசாங்கம் முயற்சிக்கின்றது.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் எவ்வாறான பொய்களை கூறினாலும், விரைவில் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு சகலரும் முகங்கொடுக்க நேரிடும், அதையும் தாண்டி தேசிய பாதுகாப்பு ரீதியிலும் சர்வதேச அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி வரும் என்றார்.

No comments:

Post a Comment