விரைவில் அமெரிக்கா செல்லும் சுமந்திரன் தலைமையிலான சட்ட நிபுணர் குழு - News View

About Us

About Us

Breaking

Friday, November 5, 2021

விரைவில் அமெரிக்கா செல்லும் சுமந்திரன் தலைமையிலான சட்ட நிபுணர் குழு

(ஆர்.யசி)

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்கள் குறித்து பரந்தளவிலான கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ளும் நோக்கில் சட்ட வல்லுனர்கள் குழுவொன்று அமெரிக்காவிற்கு செல்லவுள்ளதாகவும், தனிப்பட்ட சந்திப்புகள் மற்றும் இராஜதந்திர கலந்துரையாடல்கள் எதுவும் மேற்கொள்ளப்படாது எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எ. சுமந்திரன் தெரிவித்தார்.

சுமந்திரன் தலைமையில் சட்ட நிபுணர் குழுவொன்று விரைவில் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் அதன் நோக்கம் மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இலங்கையின் நீண்ட கால அரசியல் முரண்பாடுகள், தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகள் குறித்தும், அடுத்த கட்டங்களில் முன்னெடுக்க வேண்டிய நகர்வுகள் குறித்தும் பரந்த அளவிலான ஒரு கலந்துரையாடலை முன்னெடுக்கவும், சட்ட ரீதியிலான நகர்வுகள் குறித்து கலந்துரையாடும் விதமாக நாம் அமெரிக்கா பயணிக்கவுள்ளோம்.

சட்ட வல்லுனர்கள் மட்டத்திலான கலந்துரையாடளுக்கே அழைப்பு வந்துள்ளது. வொசிங்டன் டி.ஸியில் இந்த கலந்துரையாடல் இடம்பெறும். அது தவிர்ந்து தனிப்பட்ட கலந்துரையாடல்கள் அல்லது சந்திப்புகள் இடம்பெறாது. அவ்வாறு எந்த சந்திப்பையும் நாம் ஏற்பாடு செய்யவில்லை.

சட்ட நிபுணர்கள் குழுவில் என்னுடன் ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன் மற்றும் சட்ட நிபுணர் திருமதி நிர்மலா சந்திரஹாசன் ஆகியோரும் வருகை தருவார்கள். இந்த கலந்துரையாடல் அமெரிக்க இராஜாங்க அமைச்சுடனும், அமைச்சின் சட்ட நிபுணர்கள் குழுவுடனும் இடம்பெறும். இந்த கலந்துரையாடல்கள் முன்னரும் இடம்பெற்றுள்ள நிலையில் அதில் ஏனைய இருவரும் கலந்துகொண்டுள்ளனர்.

இலங்கையின் அரசியல் தீர்வு, தமிழ் மக்களின் நியாயாதிக்கம் குறித்து தொடர்ச்சியாக சர்வதேச சமூகத்தின் உதவிகளை பெற்று வருகின்றோம். சர்வதேச நகர்வுகள் மூலமாகவே எமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்ற நிலையில் அதனை இலக்காகக் கொண்டே எமது நகர்வுகள் அமைந்துள்ளன.

தமிழ் மக்களின் நிரந்த அரசியல் தீர்வுகள் குறித்து தூதரக மட்ட பேச்சுக்களின் போதும், அரச மட்ட பேச்சுக்களிலும் நாம் தெளிவாக எடுத்துக்கூறி வருகின்றோம். இதுவும் அவ்வாறான ஒரு நகர்வாக அமையும் என்றார்.

No comments:

Post a Comment