நாட்டில் சமாதானமும் சுபீட்சமும் ஏற்பட வேண்டுமானால் “ஒரு நாடு ஒரு சட்டம்” என்று கூறித் திரிந்தால் ஏற்படாது : அரசாங்கத்தின் நிச்சயமற்ற செயல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்படுமா? - சி.வி.விக்னேஸ்வரன் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 27, 2021

நாட்டில் சமாதானமும் சுபீட்சமும் ஏற்பட வேண்டுமானால் “ஒரு நாடு ஒரு சட்டம்” என்று கூறித் திரிந்தால் ஏற்படாது : அரசாங்கத்தின் நிச்சயமற்ற செயல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்படுமா? - சி.வி.விக்னேஸ்வரன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் சமாதானமும் சுபீட்சமும் ஏற்பட வேண்டுமானால் “ஒரு நாடு ஒரு சட்டம்” என்று கூறித் திரிந்தால் அது ஏற்படாது. சுய நிர்ணய உரிமைக்குரியவர்களுக்கு சமஷ்டி முறையான ஒரு அரசியல் யாப்பை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களையும் சமமான முறையில் வரவேற்றால்தான் சமாதானமும் சுபீட்சமும் உதயமாகும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கமத்தொழில் அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு உள்ளிட்ட 3 இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், அண்மையில் ஜனாதிபதியால் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் சேதன உரத்துக்கு மட்டுமே அரச நிவாரணங்கள் இனி கிட்டும் என்று குறிப்பிட்டிருந்தது. அதோடு சேர்ந்து மேலும் ஒரு செய்தி வெளிவந்தது. சேதன அல்லது இரசாயன உரங்களை இனி யாரும் இறக்குமதி செய்யலாம் ஆனால் அவற்றைப் பாவிக்கும் விவசாயிகளுக்கு அரசின் மானிய உதவிகள் கிடைக்கமாட்டா என்பதே அதுவாகும்.

விவசாயிகளினதும் பொதுமக்களினதும் ஆர்ப்பாட்டங்களின் பின்னர் இரசாயன உரங்களை இறக்குமதி செய்யலாம் அவற்றை அனுமதிக்கின்றோம் என்று கூறி வந்த அரசாங்கம் அதனை வெளிப்படையாகக் கூறாது சேதன உரத்துக்கு மட்டுமே அரச நிவாரணங்கள் கிட்டும் என்று மறைமுகமாக கூறி வந்ததின் நோக்கம் என்ன ? அது மட்டுமல்லாமல் தற்போது களை கொல்லிகள், கிருமிநாசினிகளையும் இறக்குமதி செய்ய அரசாங்கம் இடமளித்துள்ளது.

இவற்றை முன்னரே ஆராய்ந்தறிந்து உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்திருக்கலாம். மக்களுக்கு மன உளைச்சல்களை ஏற்படுத்திய பின்னரே இவற்றைச் செய்வோம் என்று அரசாங்கம் கூறுமாப்போல் இருக்கின்றது. இவ்வாறான அரசாங்கத்தின் நிச்சயமற்ற செயல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு வரும் தைப்பொங்கல் காலத்தில் நட்டஈடு வழங்கப்படுமா?

அடுத்து படையினருக்கு போர் முடிந்த பின்னரும் வருடாவருடம் கூடிய நிதிகளை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கிவருவது எதற்காக ? மாலைதீவோ, இந்தியாவோ எமக்கெதிராகத் தாக்குதல்களை மேற்கொள்ளமாட்டா.

நீங்கள் இந்நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் ஏனைய இன மக்களுக்கு எதிராகத்தான் படையினரைப் பாவிக்கப் போகின்றீர்கள். மக்கள் உங்களை வெறுக்கத் தொடங்க மேலும் மேலும் இராணுவ பலத்தைப் பாவிப்பதற்காகவா இந்தளவு பாரிய தொகையை படையினர் சார்பில் செலவிடுகின்றீர்கள்? இந்தத் தொகைகளில் ஒரு பகுதியையாவது எங்கள் பிறநாட்டுக் கடன்களை அடைக்கப் பாவிக்கலாம் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?

308 பில்லியன் ரூபா ஒரு சிறிய நாடான இலங்கையின் பாதுகாப்புக்கு பாவிக்க முனைவது வியப்பை அளிக்கின்றது. அண்மையில் அரசாங்க ஊழியர்கள் எமது நிதியில் பெரும் பங்கை எடுத்துவிடுகின்றார்கள் என்று நிதி அமைச்சர் கூறியிருந்தார் இது தவறு. படையினர்தான் எமது வருமானத்தில் கூடிய பங்கை விழுங்கி வருகின்றார்கள்.

இந்த வரவு செலவுத் திட்டத்தால் வட, கிழக்கு தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை. போரால் பாதிக்கப்பட்ட மக்களின் குறை தீர்க்க எந்த ஒரு திட்டமும் வகுக்கப்படவில்லை.

நாட்டில் சமாதானமும் சுபீட்சமும் ஏற்பட வேண்டுமானால் “ஒரு நாடு ஒரு சட்டம்” என்று கூறித் திரிந்தால் அது ஏற்படாது. சுய நிர்ணய உரிமைக்குரியவர்களுக்கு சமஷ்டி முறையான ஒரு அரசியல் யாப்பை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களையும் சமமான முறையில் வரவேற்றால் தான் சமாதானமும் சுபீட்சமும் உதயமாகும் என்பதை மறக்காதீர்கள் என்றார்.

No comments:

Post a Comment