மக்களாணைக்கு முரணாக செயற்பட்டால் மக்களின் வெறுப்பை பெற்றுக் கொள்ள நேரிடும் : அரசாங்கத்தை எச்சரிக்கிறார் அதுரலிய ரதன தேரர் - News View

Breaking

Friday, October 1, 2021

மக்களாணைக்கு முரணாக செயற்பட்டால் மக்களின் வெறுப்பை பெற்றுக் கொள்ள நேரிடும் : அரசாங்கத்தை எச்சரிக்கிறார் அதுரலிய ரதன தேரர்

(இராஜதுரை ஹஷான்)

கெரவலபிட்டி மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதால் எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகளை கருத்திற் கொண்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தை சாதகமாக அமையும் என எதிர்பார்க்கிறோம். மக்களாணைக்கு முரணாக செயற்பட்டால் மக்களின் வெறுப்பை பெற்றுக் கொள்ள நேரிடும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய வளங்களை பாதுகாத்தல், தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களுக்கு முன்னுரிமையளித்து நாட்டு மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளதா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

நல்ல நோக்கத்திற்காக இரசாயன உரப் பாவனை மற்றும் இறக்குமதி தடை செய்யப்பட்டன. ஆனால் இதற்கு உரிய மாற்றீடு திட்டம் முன்வைக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் சிறுபோக விவசாய நடவடிக்கையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சேதன பசளை பெரும்போக விளைச்சலுக்கு போதுமானதாக இருக்காது என்ற காரணத்தினால் சீனாவில் இருந்து சேதன பசளை இறக்குமதி செய்யப்பட்டன.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேதன பசளை உரத்தில் மண் வளத்திற்கும், காலநிலைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணங்கிகள் அடங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் உர இறக்குதி தற்போது தடை செய்யப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தேசிய மட்டத்தில் சேதன பசளை உற்பத்தி தோல்வியடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

கெரவலபிட்டி மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் இதுவரையில் முழுமையாக பகிரங்கப்படுத்தப்படவில்லை.

இந்த ஒப்பந்தத்தினால் நாட்டுக்கு ஏற்படவுள்ள விளைவுகளை கருத்திற் கொண்டு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம்.

ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் கெரவலபிட்டி மின் நிலைய விவகாரம் குறித்து பேச்சுவாரத்தையில் ஈடுபடவுள்ளோம். இப்பேச்சுவார்த்தை சாதகமாக அமையும் என எதிர்பார்க்கிறோம். தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு.

மக்களாணைக்கு முரணாக செயற்பட்டால் மக்களின் வெறுப்பை பெற்றுக் கொள்ள நேரிடும் என்பதற்காகவே அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு போராடுகிறோம் என்றார்.

No comments:

Post a Comment