கொழும்பில் இருப்பது நீச்சல் தடாகம் என்று அரசாங்கம் நினைத்துக் கொண்டிருக்கின்றதா? : அழிவடைந்த தரவுகளுடன் தொடர்புடைய அனைவரும் பாரபட்சமின்றித் தண்டிக்கப்பட வேண்டும் - எஸ்.எம்.மரிக்கார் - News View

About Us

About Us

Breaking

Friday, September 10, 2021

கொழும்பில் இருப்பது நீச்சல் தடாகம் என்று அரசாங்கம் நினைத்துக் கொண்டிருக்கின்றதா? : அழிவடைந்த தரவுகளுடன் தொடர்புடைய அனைவரும் பாரபட்சமின்றித் தண்டிக்கப்பட வேண்டும் - எஸ்.எம்.மரிக்கார்

நா.தனுஜா

அம்பாந்தோட்டையில் துறைமுகம் இருப்பதனாலேயே அம்மாவட்டத்திற்கு பைஸர் தடுப்பூசிகளை வழங்கியதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது. அவ்வாறெனில் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தின் பிரதான தளமாக விளங்குகின்ற துறைமுகமொன்று நாட்டின் தலைநகரான கொழும்பில் அமைந்திருப்பது அவர்களின் கண்களுக்குப் புலப்படவில்லையா? கொழும்பில் இருப்பதை நீச்சல் தடாகம் என்று அரசாங்கம் நினைத்துக் கொண்டிருக்கின்றதா? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒப்பீட்டளவில் கொழும்பில் வாழும் மக்களே வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே கொழும்பு வாழ் இளைஞர், யுவதிகளுக்கும் பைஸர் தடுப்பூசியைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் கணினித் தரவுத்தளத்தில் காணப்பட்ட முக்கிய கோப்புகள் அழிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு அழிக்கப்பட்ட கோப்புகளில் மருந்துப் பொருட்களின் பெயர்கள், அவை எந்தெந்த நாடுகளிலிருந்து, என்ன விலைகளில், எந்த நிறுவனங்களினால் தருவிக்கப்படுகின்றன என்பது உள்ளடங்கலாக மிகவும் முக்கிய தரவுகள் காணப்பட்டதாகக் கூறப்படுகின்றது. எனவே நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தரவுகளே இல்லாமல் போயுள்ளன.

இவ்வாறு தரவுக் கோப்புகள் பேணப்படும் போது, வருடத்திற்கு ஒருமுறை அவை மீளாய்விற்கு உட்படுத்தப்படுவது வழமையாகும். அவ்வாறெனின் 2020, 2021 ஆம் ஆண்டில் தரவுகள் மீளாய்விற்குட்படுத்தப்படவில்லையா? அதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதேபோன்று இவ்வாறான முக்கிய கட்டமைப்புக்களில் தரவுகள் அழிந்தால் பாரிய தாக்கங்கள் ஏற்படும் என்பதால், அதற்கேற்றவாறான மாற்று செயற்திட்டமொன்றும் தயார் நிலையில் பேணப்படும். எனவே இங்கு அத்தகைய செயற்திட்டம் காணப்படவில்லையா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

தற்போது அன்டிஜன் பரிசோதனைகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், மேற்படி உரிய தரவுகள் இருந்திருந்தால் அன்டிஜன் பரிசோதனை உபகரணங்களைக் குறைந்த விலையில் வழங்குவதற்கு வேறு நிறுவனங்கள் விண்ணப்பித்திருக்கின்றனவா? என்பது குறித்து கண்டறிந்திருக்க முடியும்.

ஆகவே நாட்டு மக்களின் நிகழ்கால மற்றும் எதிர்கால சுகாதார நலனில் தாக்கம் செலுத்தக் கூடிய இந்த அழிவடைந்த தரவுகள் குறித்து உரியவாறு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய அனைவரும் பாரபட்சமின்றித் தண்டிக்கப்பட வேண்டும்.

அடுத்ததாக நாட்டில் உரப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் நிலையில், விவசாயம் மற்றும் ஏனைய பயிர்ச் செய்கை நடவடிக்கைகளுக்கு அவசியமான உரத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது.

அதன் விளைவாக நாட்டின் தேசிய உணவு உற்பத்தி வீழ்ச்சியடைந்து, சந்தைக் கேள்வியுடன் ஒப்பிடுகையில் நிரம்பல் வீழ்ச்சியடையும் போதுதான் பொருட்களின் விலையேற்றம் மேலும் பாரிய நெருக்கடிக்குரிய பிரச்சினையாக மாற்றமடையும். அதனை இன்னும் 2 - 3 மாதங்களில் உணர்ந்து கொள்ள முடியும்.

மேலும் 20 - 30 வயதிற்கு இடைப்பட்டோருக்கு வழங்குவதற்கென அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு பைஸர் தடுப்பூசிகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும் விவகாரம் பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கும் நிலையில், அம்பாந்தோட்டையில் துறைமுகம் இருப்பதனாலேயே பைஸர் தடுப்பூசிகளை வழங்கியதாக அரசாங்கம் விளக்கமளித்திருக்கின்றது.

அவ்வாறெனில் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தின் பிரதான தளமாக விளங்குகின்ற துறைமுகமொன்று நாட்டின் தலைநகரான கொழும்பில் அமைந்திருப்பது அவர்களின் கண்களுக்குப் புலப்படவில்லையா? கொழும்பு மக்கள் என்ன தவறிழைத்தார்கள்? கொழும்பில் இருப்பது நீச்சல் தடாகம் என்று அரசாங்கம் நினைத்துக் கொண்டிருக்கின்றதா?

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒப்பீட்டளவில் கொழும்பில் வாழும் மக்களே வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே கொழும்பு வாழ் இளைஞர், யுவதிகளுக்கும் பைஸர் தடுப்பூசியைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment