சர்வதேச விண்வெளி நிலையத்தில் கரும்புகை - அபாய ஒலி எழுப்பிய வீரர்கள் - என்ன நடந்தது? - News View

Breaking

Friday, September 10, 2021

சர்வதேச விண்வெளி நிலையத்தில் கரும்புகை - அபாய ஒலி எழுப்பிய வீரர்கள் - என்ன நடந்தது?

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பிளாஸ்டிக் கருகும் வாசனை வருவதாக அதன் ரஷ்ய பகுதியில் இருந்த வீரர்கள் கூறியதையடுத்து, அபாய சங்கு ஒலிக்கப்பட்டது. இது தொடர்பாக ரஷ்ய கலனில் இருந்து அமெரிக்காவின் நாசா கலனில் இருப்பவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சில மணி நேரத்தில் இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டு விட்டதாக ரஷ்ய விண்வெளி அமைப்பான ராஸ்கோமாஸ் தெரிவித்துள்ளது.

கருகும் வாசனை வந்தபோது விண்வெளி நிலையத்தின் பேட்டரிகள் சார்ஜ் செய்யப்பட்டுக் கொண்டிருந்ததாகவும் அப்போது புகை எழுந்ததாகவும் ரஷ்ய விண்வெளி நிலையமான ராஸ்கோமாஸ் தெரிவித்துள்ளது.

அந்த பிரச்சினை சரி செய்யப்பட்டு தற்போது இயல்புநிலை திரும்பி விட்டதாகவும் ராஸ்கோமாஸ் கூறியுள்ளது.

தற்போது விண்வெளி வீரர்கள் தங்களுடைய வழக்கமான பயிற்சிக்கு திரும்பி விட்டனர் என்றும் அந்த அமைப்பு கூறியிருக்கிறது.

இந்த சம்பவம் காரணமாக, நாளை திட்டமிடப்பட்டிருந்த விண்வெளி நடைபயணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று நாசா மற்றும் ராஸ்கோமாஸ் தெரிவித்துள்ளன.

ரஷ்ய மாட்யூலில் என்ன பிரச்சினை?
இன்று வெளிப்பட்ட கரும்புகை, ரஷ்யா உருவாக்கிய ஸ்வெஸ்டா மாட்யூல் எனப்படும் வசிப்பிட வசதி கொண்ட அமைப்பில் இருந்து வந்ததாக ரஷ்ய ஊடக செய்தி கூறுகிறது. இந்த 'மாட்யூல்' 2000ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டது.

43 அடி நீளம், 13.5 அடி அகலம் கொண்ட இந்த மாட்யூலின் எடை சுமார் 2.25 டன் இருக்கும். இதன் அசைவுகளுக்காக இரண்டு எஞ்சின்கள் இரு புறமும் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கான மின்சாரம் 97.5 அடி கொண்ட சூரிய தகடு விசிறி மூலம் உற்பத்தியாகிறது. இதுதான் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ரஷ்யா வழங்கிய முழுமையான சுய தயாரிப்பு அமைப்பாக நாசா கூறுகிறது.

விண்வெளியில் மனிதர்கள் வாழ்வதற்கான வசதிகளை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த மாட்யூலில் வசிப்பிட அறை, உயிர் காக்கும் சிகிச்சை சாதனங்கள், மின்சார விநியோக அமைப்புகள், டேட்டா ப்ராசஸிங் எனப்படும் தரவுகளை பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு இணைக்கும் கேபிள்கள், எஞ்சின் இயங்குதள வசதி போன்றவை உள்ளன.

இவை அனைத்தும் பூமியில் உள்ள விண்வெளி நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி ரிமோட் மூலம் இயக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த மாட்யூலில் ரஷ்யாவின் சோயஸ் விண்கலனை இணைக்கும் பகுதியும் எதிர்காலத்தில் மேம்பட்ட விண்கலனை இணைக்கும் வசதியும் உள்ளன.

சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆயுள் இருபது ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. இதனால், அதன் சில அடிப்படை வன்பொருள், மென்பொருள் செயலிகள் மேம்படுத்தப்படாமல் இருப்பதால் முந்தைய காலத்திலும் சில தொழில்நுட்ப பிரச்சினைகளை விண்வெளி நிலையம் சந்தித்துள்ளது. இது தொடர்பாக விஞ்ஞானில் அவ்வப்போது எச்சரித்து வருவதுண்டு.

சில நேரங்களில் காற்று கசிவு, எஞ்சின்கள் திடீரென இயக்குவது, விரிசல் போன்ற பிரச்னைகளும் எதிர்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், அவை மிகப்பெரிய பிரச்னையாக வெடிக்காத வகையில் விண்வெளி நிலைய வீரர்களும், தரை கட்டுப்பாட்டு விஞ்ஞானிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பிரச்னைகளை சமாளித்து வருகின்றனர்.

ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான எனர்ஜியாவின் தலைமை பொறியாளர் விளாடிமீர் சோலோயொஃப் கடந்த 1ஆம் திகதி ஊடகங்களிடம் பேசும்போது சர்வதேச விண்வெளி நிலையத்தின் பல வன்பொருள் மற்றும் பாகங்கள் பழுது நீக்க முடியாத வகையில் இருப்பதாக கூறியிருந்தார்.

இவர் பணியாற்றும் எனர்ஜியா நிறுவனம்தான் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷ்ய மாட்யூலின் பெரும்பகுதியை மேம்படுத்தும் முக்கிய பணியை செய்து வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவின் சார்யா என பெயரிடப்பட்ட சரக்குகள் கையாளும் பிரிவில் ஏற்பட்ட சிறு, சிறு விரிசல்கள் காலப்போக்கில் மேலும் மோசம் அடையலாம் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
ஐஎஸ்எஸ் எப்படி செயல்படுகிறது?
அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து கூட்டு திட்டமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணியை 1998 இல் நிறைவு செய்தனர். தொடக்கத்தில் இந்த நிலையம், 15 ஆண்டுகளுக்கு இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகும் அந்த நிலையம் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், உலோகத்தால் உருவான இந்த நிலையம், சேதம் அடைந்தால் அது ஈடு செய்ய முடியாத பேரழிவை ஏற்படுத்தலாம் என்று ரஷ்ய துணை பிரதமர் யூரி போரிசோஃப் கடந்த மாதம் அந்நாட்டு அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போசு கூறியிருந்தார். அத்தகைய ஒரு நிலை வராமல் நாம் தடுக்க வேண்டும் என்றும் அவர் ஐஎஸ்எஸ் உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

முன்னதாக, கடந்த ஆண்டு ரஷ்ய விண்வெளி நிலையமான ரோஸ்கோமாஸ், சர்வதேச விண்வெளி நிலையத்தின் வெளிப்புற வடிவின் நிலையை பார்க்கும்போது அது 2030 க்கு மேல் தாக்குப்பிடிக்காது என்று கூறியிருந்தது.

கடந்த ஜூலை மாதம் ரஷ்யாவின் நெளகா மாட்யூல் பகுதியில் ஜெட் இயங்கு தளத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஐஎஸ்எஸ் செயல்பாடுகள் சில நிமிடங்கள் முடங்கின.

இதற்கிடையே, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியேறி தமது சொந்த விண்வெளி நிலையத்தை கட்டமைக்க ரஷ்யா ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால், ஆக்கபூர்வ முடிவு எதையும் அந்த நாட்டு அரசு வெளிப்படையாக இன்னும் அறிவிக்கவில்லை.

தற்போதைக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏழு வீரர்கள் உள்ளனர். அதில் இரண்டு பேர் ரஷ்யாவின் காஸ்மோனாட்டுகள். மூன்று பேர் அமெரிக்கா்கள், பிரான்ஸ் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த தலா ஒருவர் உள்ளனர்.
Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

No comments:

Post a Comment

Post Bottom Ad