(எம்.ஆர்.எம்.வசீம்)
கொவிட் தொற்று கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் எதிர்பார்க்கப்படும் ஒத்துழைப்பு கிடைக்கா விட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை தொழிற்சங்க போராட்டத்துக்கு செல்வோம் என அரச தாதிய அதிகாரிகளின் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
கொவிட் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சுகாதார பிரிவினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவில் அரசாங்கம் குறைப்பு செய்திருப்பது தொடர்பில் குறிப்படுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் தொற்று கட்டுப்படுத்தவதற்காக உயிரை பணயம் வைத்து செயற்படுகின்ற சுகாதார துறையின் கொரோனா உதவி தொகையாக மாதாந்தம் 7ஆயிரத்தி 500 ரூபா வழங்கி வந்தது. தற்போது அந்த தொகையை முற்றாக நீக்கி இருக்கின்றது.
அதேபோன்று எமது ஊழியர்கள் ஆளணி பற்றாக்குறை காரணமாக மேலதிக நேரமாக மாதத்துக்கு 200 முதல் 250 மணித்தியாலங்கள் சேவை செய்கின்றனர். அதற்கான கொடுப்பனவையும் குறைத்திருக்கின்றது.
அத்துடன் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி இருக்கின்றபோதும் அதனை செய்வதும் இல்லை.
ஊழியர்களுக்கு தேவையான சுகாதார பாதுகாப்பு வசதிகளையும் இதுவரை வழங்காமல் இருக்கின்றது.
இவ்வாறான நிலையில் கொவிட் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்திடம் எதிர்பார்க்கப்படும் ஆதரவு கிடைக்கப் பெறாவிட்டால் எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை பாரிய தொழிற்சங்க போராட்டம் ஒன்றுக்கு செல்வோம்.
மேலும் நாட்டில் கொராே நோயாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிககையில் குறைவு ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது. என்றாலும் அரசாங்கத்தின் தோல்வியடைந்த சுகாதார முகாமைத்துவம் காரணமாக எந்த சந்தர்ப்பத்திலும் மீண்டுமொரு கொராேனா அலை ஒன்று ஏற்படும் அபாயம் இருக்கின்றது.
அத்துடன் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை குறைந்தாலும் வீடுகளில் மரணிப்பவர்களின் வீதம் அதிகரித்திருக்கின்றது. இது நல்ல நிலைமையல்ல. அதனால் கொவிட் தொடர்பான பரிசோதனைகளை முறையாக மேற்கொண்டு, நாட்டின் உண்மை நிலைமையை புரிந்துகொள்ள வேண்டும் என அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்
No comments:
Post a Comment