(இராஜதுரை ஹஷான்)
கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க எடுத்துள்ள தீர்மானம் முற்றிலும் தவறானது. அமைச்சரவை அனுமதியில்லாமலும், ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு அறிவிக்காமலும் ஒப்பந்தம் நள்ளிரவில் கைச்சாத்திட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
நாட்டின் எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தங்களுக்கு ஆதரவு வழங்க முடியாது. இதன் காரணமாகவே இவ்விடயம் தொடர்பில் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம் எனவும் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கெரவலபிட்டிய மின் நிலையத்தின் யுகதணவி நிலைய பங்குகளின் 40 சதவீதத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் அங்கம் வகிக்கும் 10 பிரதான பங்காளிகள் ஒன்றினைந்து கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம்.
இவ்விடயம் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (நேற்றுமுன்தினம்) இடம் பெற்ற பேச்சுவார்த்தை தீர்மானமின்றி நிறைவு பெற்றதுடன், ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் ஒரு தீர்வை எடுப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள ஏனைய அனைத்து மின் நிலையங்களுக்கும் எரிபொருளை விநியோகிக்கும் உரிமை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளமை நாட்டின் இருப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்றார்.
No comments:
Post a Comment