அர்ஜூன ரணதுங்கவின் அறிக்கையை கடுமையாக சாடினார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 7, 2021

அர்ஜூன ரணதுங்கவின் அறிக்கையை கடுமையாக சாடினார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா

இந்தியா தனது நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டமைக்கு இலங்கை கிரிக்கெட் நன்றி தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்த பாகிஸ்தானின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா, அர்ஜூன ரணதுங்கவின் அறிக்கையையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் இலங்கைக்கு உலகக் கிண்ணத்தை பெற்றுக் கொடுத்த அர்ஜுன ரணதுங்க, இந்திய அணியின் இலங்கை சுற்றுப் பயணம் குறித்து தனது அறிக்கைக்கு பல விமர்சனங்களை எதிர் நோக்கியுள்ளார்.

இலங்கை சுற்றுப் பயணத்துக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், தனது ‘பி அணியை’ அனுப்பியுள்ளது. இது ஒரு வகையில் இலங்கை கிரக்கெட்டை அவமதிக்கும் செயலாகும் என அவர் அண்மையில் கூறியிருந்தார்.

அர்ஜுன ரணதுங்கவின் அறிக்கைக்கு பின்னர், இலங்கை கிரிக்கெட் அதற்கு பதில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது, அதில் இந்தியா அனுப்பிய 20 பேர் கொண்ட அணியில், 14 வீரர்கள் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் தங்கள் நாட்டுக்காக விளையாடியுள்ளனர். எனவே இது இரண்டாம் வகுப்பு அணி அல்ல என்று வாரியம் கூறியது.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியாவும் இலங்கை கிரிக்கெட்டின் அறிக்கையை ஆதரித்துள்ளார்.

இலங்கை சுற்றுப் பயணத்தில் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்கள் உட்பட சிரேஷ்ட வீரர்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளமையினால், இந்த அணியை இரண்டாம் தர அணி என்று அழைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று கனேரியா கூறினார்.

யூடியூப் அலைவரிசையில் இது தொடர்பில் மேலும் கூறிய அவர், ‘ரணதுங்க இந்த அறிக்கையை தலைப்புச் செய்திகளில் மட்டுமே வைத்திருக்கிறார். இந்திய அணி 50-60 வீரர்களைக் கொண்டுள்ளது. அவர்களால் இரண்டு சர்வதேச அணிகளை உருவாக்க முடியும். ஷிகர் தவான், புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட பல வீரர்கள் சில காலமாக இந்திய அணியுடன் உள்ளனர்.

ஆகவே முன்னணி கிரிக்கெட் வீரர்களிடமிருந்து இதுபோன்ற அறிக்கைகளைக் கேட்பது வருத்தமளிக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான தொடர் இலங்கைக்கு ஸ்பான்சர்ஷிப் மற்றும் நிதிகளைக் கொண்டுவரும் என்பதால் இந்தியா தனது நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டமைக்கு இலங்கை கிரிக்கெட் பி.சி.சி.ஐ.க்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

இலங்கை கிரிக்கெட் வீழ்ச்சியடைந்து வருகிறது. அவர்கள் இங்கிலாந்தில் தொடரை விளையாடும் விதம். அவர்கள் கிரிக்கெட் விளையாட மறந்துவிட்டதாகத் தெரிகிறது. நிதி நெருக்கடியிலிருந்து வெளியே வர இந்தியா தனது அணியை அனுப்புகிறது என்பதை இலங்கை வாரியம் பாக்கியமாக உணர வேண்டும்.

பி.சி.சி.ஐ இலங்கை கிரிக்கெட்டை அவமதித்ததாக அர்ஜூன ரணதுங்க சமீபத்தில் தெரிவித்தார்.

ஜூலை 13 முதல் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்திய சுற்றுப் பயணம் குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் அர்ஜூன ரணதுங்க,

'இது இரண்டாம் வகுப்பு இந்திய அணி அவர்கள் இங்கு வருவது எங்கள் கிரிக்கெட்டை அவமதிப்பதாகும். தொலைக்காட்சி மார்க்கெட்டிங் தேவைகளை பூர்த்தி செய்ய அவர்களுடன் விளையாட ஒப்புக்கொண்டதற்கு தற்போதைய நிர்வாகத்தை நான் குறை கூறுகிறேன்.

இந்தியா தனது சிறந்த அணியை இங்கிலாந்துக்கு அனுப்பியுள்ளது மற்றும் பலவீனமான அணி இங்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு வாரியத்தை நான் குறை கூறுகிறேன் என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad