வெலிக்கடை சிறைச்சாலையை ஹொரணை பிரதேசத்துக்கு இடமாற்றி சர்வதேச தரத்திலான பல சிறைக்கூடுகளை அமைக்க நடவடிக்கை - அலி சப்ரி - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 7, 2021

வெலிக்கடை சிறைச்சாலையை ஹொரணை பிரதேசத்துக்கு இடமாற்றி சர்வதேச தரத்திலான பல சிறைக்கூடுகளை அமைக்க நடவடிக்கை - அலி சப்ரி

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

வெலிக்கடை சிறைச்சாலையில் போதுமான இடவசதி இல்லை. அதனால் பல வசதிகள் அடங்கிய ஹொரணை பிரதேசத்துக்கு அதனை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்திருக்கின்றோம் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்தை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் இருக்கும் சிறைச்சாலைகளில் அதிகபட்சமாக 10 ஆயிரம் பேர் வரையானவர்களையே சிறைப்படுத்தி வைக்க முடியும். என்றாலும் கொவிட்டுக்கு முன்னர் 28 ஆயிரம் சிறைச்சாலைகளில் இருந்தனர். 

கொவிட் தொற்று இதற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனால் சாதாரண குற்றவாளிகளை பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுத்தோம். அதன் பிரகாரம் தற்போது 18 ஆயிரம் பேர் வரை குறைத்திருக்கின்றோம். இது குறுகிய கால நடவடிக்கையாகும்.

என்றாலும் நீண்ட கால வேலைத்திட்டமாக கொழும்பில் இருக்கும் வெலிக்கடை சிறைச்சாலையை முற்றாக அந்த இடத்தில் இருந்து அகற்றி, ஹொரண மில்லதெனிய பிரதேசத்தில் 200 ஏக்கர் விசாலமான இட வசதி உள்ள இடத்துக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். 

அங்கு புதிதாக மெண்டெல்லா சர்வதேச சட்டத்துக்கு அமைய, சர்வதேச தரத்திலான பல சிறைக்கூடுகளை அமைக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். அத்துடன் இதன் மூலம் தற்போது இருக்கும் சிறைச்சாலைகளின் கொள்ளளவை விட பல மடங்கு அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். 

விசேடமாக பெண்கள், சிறுவர்களுக்கு அங்கு பிரத்தியேகமான இடங்களை ஒதுக்க இருக்கின்றோம். அதேபோன்று போதைக்கு அடிமையானவர்களை சிறையிலடைப்பதற்கு பதிலாக அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். 

ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேரை புனர்வாழ்வளிப்பதற்கு முடியுமான இட வசதிகளை ஏற்பாடு செய்து வருகின்றோம். அதேபோன்று 2 ஆயிரம் சிறைக்கூடுகளையும் அங்கு அமைக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

எனவே தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு இல்லாத வகையில் மக்களின் சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் மனித உரிமையை பாதுகாப்பதும் எமது கடமை. இந்த இரண்டு விடயங்களையும் அடிப்படையாக் கொண்டே சட்ட திருத்தங்களை மேற்கொள்ள இருக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad