இளைஞர்கள் மத்தியில் பரவி வரும் 'புளூடூத்திங்' (Bluetoothing) அல்லது 'ஹொட்ஸ்போட்டிங்' (Hotspotting) என்ற புதிய பழக்கத்தால், தென் பசிபிக் நாடான பிஜியில் (Fiji) எச்ஐவி (HIV) தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரித்துள்ளது.
இது ஒரு தேசிய சுகாதார நெருக்கடியாக உருவெடுத்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
'புளூடூத்திங்' என்றால் என்ன?
இது கையடக்கத் தொலைபேசிகளிலோ அல்லது இலத்திரனியல் கருவிகளில் காணப்படும் தொழில்நுட்பம் அல்ல. மாறாக இது போதைப் பொருள் பாவனையாளர்கள், ஊசியைப் பயன்படுத்தி போதை மருந்து கலந்த இரத்தத்தை ஒருவர் மற்றவருடன் பரிமாறிக் கொள்ளும் ஆபத்தான நடைமுறையாகும்.
போதைப் பொருள் விலை மற்றும் ஊசி தட்டுப்பாடு போன்ற காரணங்களால், ஒருவர் போதைப் பொருளை உடலில் ஏற்றிக் கொண்டு, பின்னர் அவரது இரத்தத்தை எடுத்து மற்றவர் தமது உடலில் ஏற்றுவதையே 'புளூடூத்திங்' எனக் குறிப்பிடுகின்றனர்.
இந்த அபாயகரமான பழக்கம் பிஜியில் வெகுவாக அதிகரித்துள்ளது. 2014ஆம் ஆண்டில் 500 க்கும் குறைவாக இருந்த எச்ஐவி தொற்றாளர்களின் எண்ணிக்கை, கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 10 மடங்கு உயர்ந்து தற்போது 5,900 ஆக அதிகரித்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் 1,093 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் 223 பேர் நரம்புவழி போதை மருந்து பயன்பாட்டால் நோய் தொற்றுக்கு உள்ளானதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல் வெளியிட்டுள்ளது.
புதிய தொற்றாளர்களில், 10 வயது சிறுவன் உட்பட, 19 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பலர் இந்த 'புளூடூத்திங்' முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மேலும் 3,000 பேருக்கு எச்ஐவி ஏற்பட வாய்ப்புள்ளது என்று பிஜியின் சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா, தன்சானியா, லெசோதோ மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளிலும் இந்தப் பழக்கம் இருப்பதாக ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளதுடன், இதனைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment