சமாதானத்துக்கான நோபல் பரிசு பெறுவாரா டொனால்ட் ட்ரம்ப்? : இன்று வெளியாகிறது பெயர்ப்பட்டியல் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 9, 2025

சமாதானத்துக்கான நோபல் பரிசு பெறுவாரா டொனால்ட் ட்ரம்ப்? : இன்று வெளியாகிறது பெயர்ப்பட்டியல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உலகின் மிக உயரிய கௌரவங்களில் ஒன்றான சமாதானத்துக்கான நோபல் விருதைப் பெற்ற ஜனாதிபதிகள் மற்றும் துணை ஜனாதிபதிகளின் பட்டியலில் இணைய விரும்புகிறார். இந்தப் பரிசு இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.

இந்த சர்வதேச விருது, உலகை மிகவும் அமைதியான இடமாக மாற்றும் பணிகளைச் செய்பவர்களையோ அல்லது அமைப்புகளையோ கௌரவிக்கிறது. நோபல் குழு பரிந்துரைப்பவர்களின் பெயர்களை வெளியிடுவதில்லை, ஆனால் சிலர் தாங்கள் யாரைப் பரிந்துரைத்தார்கள் என்பதை பகிரங்கமாக அறிவிக்கின்றனர். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து உலகத் தலைவர்கள், மனிதாபிமானிகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் இந்த சமாதானத்துக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளனர்.

2025ஆம் ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு, இன்று ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை, காலை 5 மணிக்கு அறிவிக்கப்படும். இந்தப் பரிசு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி நோர்வேயின் ஒஸ்லோவில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.

நோபல் பரிசு, ஸ்வீடிஷ் தொழிலதிபரான ஆல்பிரட் நோபல் என்பவரால் நிறுவப்பட்டது. அவரது உயிலில், தனது செல்வத்தைப் பயன்படுத்தி, ‘மனிதகுலத்துக்கு மிகப்பெரிய பயனை அளித்தவர்களுக்கு’ பரிசுகளை வழங்க ஒரு நிதியை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

நோபலின் உயிலில், நாடுகளுக்கு இடையேயான சகோதரத்துவத்துக்காகவும், படைக்குறைப்பு மற்றும் அமைதியை உருவாக்க மிகச் சிறந்த பணியைச் செய்தவருக்கும் சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் முயற்சிகள் மற்றும் ஜனநாயகத்தை மேம்படுத்தும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான முயற்சிகள் இந்த விருதால் கௌரவிக்கப்பட்டுள்ளன.

பரிசு பெறுபவர்கள் ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் பணப் பரிசு ஆகியவற்றைப் பெறுகின்றனர். 6.6 செ.மீ அளவுள்ள தங்கப் பதக்கத்தில் ஆல்ஃபிரட் நோபலின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது, மேலும் அவரது பெயர், பிறந்த ஆண்டு மற்றும் இறந்த ஆண்டு பதக்கத்தின் விளிம்பில் பொறிக்கப்பட்டுள்ளன. பதக்கத்தின் பின்புறத்தில் மூன்று ஆண்கள் ஒருவரையொருவர் தழுவிக்கொள்வது போன்ற உருவம், சர்வதேச சகோதரத்துவத்தை குறிக்கிறது, மேலும் ‘மக்களிடையே சமாதானம் மற்றும் சகோதரத்துவத்துக்காக’ என்ற இலத்தீன் மொழி வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

சமாதானத்துக்கான நோபல் பரிசு எவ்வாறு வழங்கப்படுகிறது?
உலகில் சமாதானம் மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்கு அதிகளவில் பங்களித்த நபருக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்று அதன் இணையத்தளம் கூறுகிறது. இந்தப் பரிசு நோர்வே பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவால் வழங்கப்படுகிறது. ஏனைய நோபல் பரிசுகள் ஸ்வீடனில் வழங்கப்படுகின்றன.

தகுதியுள்ள பரிந்துரைப்பாளர்கள் மூலம் எந்தவொரு நபரோ அல்லது அமைப்போ பரிந்துரைக்கப்படலாம். தகுதியுள்ள பரிந்துரைப்பாளர்களில் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசாங்க சேவகர்கள், சர்வதேச நீதிமன்றம் போன்ற அமைப்புகளின் உறுப்பினர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் அல்லது பணிப்பாளர்கள் மற்றும் முன்னர் பரிசு பெற்றவர்கள் அல்லது நோபல் குழு உறுப்பினர்கள் அடங்குவர். பரிந்துரைக்கும் கடைசி திகதி அந்த ஆண்டின் ஜனவரி மாதம் 31ஆம் திகதியாகும். 2025 சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு 330 இற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டனர்.

பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் பரிந்துரை குழுவின் விபரங்கள் பகிரங்கப்படுத்தப்படுவதில்லை. காலக்கெடு முடிந்த பிறகு, நோபல் குழு பரிந்துரைக்கப்பட்டவர்களை ஆய்வு செய்து, ‘மிகவும் சுவாரசியமான மற்றும் தகுதியான வேட்பாளர்களின்’ குறுகிய பட்டியலை உருவாக்குகிறது. இந்த வேட்பாளர்கள், குழு உறுப்பினர்களால் மதிப்பீடு மற்றும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

பரிசு வெற்றியாளரை ஒக்டோபர் தொடக்கத்தில் அறிவிப்பதற்கு முன், குழுவின் கடைசிக் கூட்டத்தில் பரிசு பெறுபவர் தீர்மானிக்கப்படுகிறார். இந்த முடிவு பெரும்பான்மை வாக்குகளால் எடுக்கப்படுகிறது, ஆனால் குழு ஒருமித்த முடிவை எடுக்க முயற்சிக்கிறது.

சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவர்கள் யார் ?
1901 முதல் அமைதிக்கான நோபல் பரிசு 105 முறை வழங்கப்பட்டுள்ளது. ஒரு பரிசை ஒருவர் அல்லது மூவர் பகிர்ந்துள்ள சந்தர்ப்பங்களும் அதிகம். இதனால் மொத்தம் 139 பேர் இதுரை பரிசு பெற்றுள்ளனர், இதில் 92 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 28 அமைப்புகள் அடங்குவர்.

சமாதானத்துக்கான முதல் நோபல் பரிசை பெற்றவர்களாக பிரெஞ்சு விஞ்ஞானியும் அரசியல்வாதியுமான ஃபிரெடெரிக் பாஸி மற்றும் செஞ்சிலுவை சங்கத்தின் இணை நிறுவனரான ஸ்விஸ் தொழிலதிபர் ஜீன் ஹென்றி டுரான்ட் ஆகியோர் உள்ளனர். 

பாஸி, ‘சர்வதேச சமாதான மாநாடுகள், இராஜதந்திரம் மற்றும் மத்தியஸ்தத்துக்காக தனது வாழ்நாள் முழுவதும் பணியாற்றியதற்காக’ கௌரவிக்கப்பட்டார், அதேசமயம் டுரான்ட், காயப்பட்ட வீரர்களுக்கு உதவியதற்காகவும் பரஸ்பர புரிந்துணர்வை உருவாக்குவதற்கு பாடுபட்டமைக்காகவும், அவரது மனிதாபிமான முயற்சிகளுக்காகவும் பரிசு பெற்றார்.

சமாதானத்துக்கான பரிசு பெறுபவர்களில் 2014 இல் பாகிஸ்தான் சமூக ஆர்வலர் மலாலா யூசூப்பி மற்றும் 2009 இல் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா ஆகியோர் அடங்குவர். ஒபாமாவின் வெற்றி, ‘சர்வதேச இராஜதந்திரத்தையும் மக்களிடையே ஒத்துழைப்பையும் வலுப்படுத்திய அசாதாரண முயற்சிகளுக்காக’ வழங்கப்பட்டது, ஆனால் அவர் அப்போது ஒரு வருடத்திற்கும் குறைவாகவே பதவியில் இருந்ததால் இது ஆச்சரியமாக கருதப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் 2002 இல் இந்த கௌரவத்தைப் பெற்றார். எழுத்தாளர் எலி வீசல் 1986 இலும் தென்னாபிரிக்காவில் இனவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்த அதிவணபிதா டெஸ்மண்ட் டுட்டு 1984 இலும் இந்தப் பரிசைப் பெற்றனர்.

ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் மற்றும் அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான சர்வதேச பிரசாரம் போன்ற அமைப்புகளும் இந்தப் பரிசைப் பெற்றுள்ளன.

சமாதானத்துக்காக டொனால்ட் ட்ரம்ப் நோபல் பரிசை வெல்வாரா?
ட்ரம்ப் தன்னை ‘சமாதானத்தின் ஜனாதிபதி’ என்று கூறியுள்ளார் மற்றும் தனது இரண்டாவது பதவிக் காலத்தில் இஸ்ரேல்-ஈரான், இந்தியா-பாகிஸ்தான், தாய்லாந்து-கம்போடியா உள்ளிட்ட ஏழு போர்களை முடிவுக்கு கொண்டு வந்ததாகக் கூறியுள்ளார். ஆனால் இந்த மோதல்கள் அனைத்தும் முழுமையாக தீர்க்கப்படவில்லை, மேலும் இவற்றில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் அல்லது செல்வாக்கு தீர்க்கமானதாக இருந்ததா என்பது தெளிவாக இல்லை என்று வெளியுறவுக் கொள்கை வல்லுநர்கள் தெரிவித்தனர்.

ட்ரம்ப் இஸ்ரேல்-காசா மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர்களுக்கு சமாதானத் திட்டங்களை முன்மொழிந்துள்ளார். நோபல் குழு தனக்கு இந்தப் பரிசை வழங்க வேண்டும் என்று அவர் கூறினார். சபையில், எல்லோரும் தனக்கு இந்தப் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று கூறுவதாக அவர் செப்டம்பரில், ஐக்கிய நாடுகள் சபையில் குறிப்பிட்டார். 

ஆனால், செப்டம்பர் 2025 இல் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய பேட்டியில் இந்தப் பரிசைத் தான் தேடவில்லை என்றும், போர்களை முடிவுக்கு கொண்டுவருவதே தனது நோக்கம் என்றும், கவனத்தை ஈர்க்க விரும்பவில்லை, உயிர்களை காப்பாற்ற விரும்புகிறேன் என்றும் கூறினார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவால் ஜூலையிலும் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்தால் ஜூனிலும் சமாதானத்துக்கான நோபல் விருதுக்கு ட்ரம்ப் பரிந்துரைக்கப்பட்டார். 

இந்த வாரம், இஸ்ரேலிய பணயக் கைதிகளின் குடும்ப மன்றம், ஹமாஸால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களை மீட்பதில் டிரம்ப் காண்பித்த ‘அசைக்க முடியாத உறுதிப்பாடு மற்றும் அசாதாரண தலைமைத்துவத்திற்காக’ அவருக்கு இந்தப் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று கோரியது. 

ஆனால், இந்த முயற்சிகள் 2025 நோபல் அமைதி பரிசுக்கான காலக்கெடுவைத் தாண்டியவை. ட்ரம்ப் தனது முதல் பதவிக் காலத்திலும் இந்தப் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

நோபல் குழு, ட்ரம்பின் இரண்டாவது பதவிக்கால சாதனைகளுக்காக இந்தப் பரிசை வழங்குவது சாத்தியமில்லை என்று வல்லுநர்கள் தெரிவித்தனர். இருப்பினும், ஒபாமா தனது முதல் ஆண்டில் எந்த அமைதி ஒப்பந்தங்களையும் செய்யாமல் இந்த விருதை வென்றார்.

நோபல் குழு, ‘சமாதானத்தின் நீடித்த தன்மை, சர்வதேச சகோதரத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் அந்த இலக்குகளை வலுப்படுத்தும் அமைப்புகளின் அமைதியான பணிகளை’ முக்கியமாக கருதுகிறது.

No comments:

Post a Comment