பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை திருத்துவது அல்லது சர்வதேச நடைமுறைகளுடன் ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பான எந்தவித அர்த்தமுள்ள செயற்பாட்டையும் அரசாங்கம் அறிமுகப்படுத்த தவறிவிட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை திருத்துவதற்கு பதிலாக அதன் நோக்கத்தை மேலும் விரிவுபடுத்தும் விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் நெருக்கடி நிலையை தோற்றுவித்துள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய பாராளுமன்றத்தினால் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை சம்பந்தமாக ஐக்கிய மக்கள் சக்தி நேற்று விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகள் 2017 ஆம் ஆண்டு மே மாதம் மீண்டும் இலங்கைக்கு கிடைத்தது. இந்த சலுகையின் கீழ் வழங்கப்படும் நன்மைகளால் பல ஏற்றுமதியாளர்கள் குறிப்பாக ஆடைத் தொழில் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் பாரிய நன்மைகளைப் பெற்றுள்ளனர்.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக்கிணங்க பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் பல சிக்கலான பிரிவுகளை திருத்துவதற்கு இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மேற்படி ஜிஎஸ்பி சலுகைகளை வழங்குவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளில் ஒன்றாகும்.
அத்தகைய கட்டுப்பட்டுள்ள நிபந்தனைகளை அலட்சியப்படுத்தியதால் இலங்கை மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அந்த முக்கிய சலுகைகளை இழக்கவுள்ளனர்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ள போதும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை திருத்துவது அல்லது சர்வதேச நடைமுறைகளுடன் ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பான எந்த ஒரு அர்த்தமுள்ள செயன் முறையையும் அரசாங்கம் அறிமுகப்படுத்த தவறிவிட்டதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை எதிர்க்கட்சி என்ற வகையில் நடைமுறை தீர்வுகளை முன் வைக்காமல் தற்போதைய அரசாங்கத்தின் தோல்விகளை சுட்டிக்காட்ட ஐக்கிய மக்கள் சக்தி விரும்பவில்லை.
சட்டத்துறையின் நிபுணர்கள் குழுவான சட்ட ஆணைக்குழு தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில் சட்ட வரைவு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சர்வதேச சட்டங்களுடன் பொருந்தக்கூடிய ஒரு பயனுள்ள சட்ட ஆவணமாகும். சட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளை பரிசீலனை செய்து வரும் ஐக்கிய மக்கள் சக்தியானது இந்தப் பிரேரணைகளை பரிசீலிக்கின்ற நடவடிக்கை ஒன்றை பாராளுமன்றத்தில் மேற்கொள்ளும்.
எமது மனித உரிமைசெயற்பாடுகள் மற்றும் ஜனநாயகத்துக்கு களங்கம் ஏற்படாத ஒரு வலுவான அத்துடன் பயனுள்ள தேசிய பாதுகாப்பு கட்டமைப்பு ஒன்றை உருவாக்க முடியும் என்பது ஐக்கிய மக்கள் சக்தியின் பலமான நம்பிக்கையாகும் என்றும் அந்த கட்சி தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment