பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் விதிகளை மறுபரிசீலனை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளதற்கிணங்க மேற்படி மறுபரிசீலனை செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதுடன் தற்போதுள்ள சட்டங்களை ஆய்வு செய்வதற்கும் அவற்றில் தேவையான திருத்தங்களை பரிந்துரைப்பதற்குமென அமைச்சரவை உப குழுவொன்றை நியமிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டு மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூரமான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்காகவே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் விதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு, அத்தகைய சூழலில் 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களில் பல ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் உட்பட கணிசமான உயிரிழப்புக்கள் ஏற்பட்டதையும் நினைவுபடுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பாக இலங்கையின் சார்பில் கருத்துக்களை தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு, அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 2021 ஜூன் 10 ஆம் திகதி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு தமது வருத்தத்தை தெரிவிக்கின்றது.
இலங்கையின் நிலைமை தொடர்பாக, குறிப்பாக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் என்ற தொனியில் மேற்படி தீர்மானம் உண்மைக்கு மாறான கருத்துக்களை கொண்டிருப்பதுடன் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியில் இலங்கை மேற்கொண்டுள்ள பன்முக முன்னேற்றம் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
நாட்டு மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூரமான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்காகவே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் விதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை அரசாங்கம் முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றது.
இரு தரப்பு உறவுகளின் அடிப்படையில் வெளிநாட்டமைச்சின் மூலமாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு காத்திரமான, நட்புறவு உரையாடலை இலங்கை அரசாங்கம் பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2000 - 2021ஆம் ஆண்டிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் கண்காணிப்பு செயற்பாட்டின் மூன்றாம் சுற்று மீளாய்வு தற்போது நடைபெற்று வருகின்றது.
கூட்டு ஆணைக்குழுவின் கீழ் செயற்படும் சம்பந்தப்பட்ட செயற்குழுக்கள் மற்றும் குழுக்கள் மூலம் மேலதிக புதிய விடயங்கள் வழங்கப்படுகின்றன.
இத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் தொடர்பில் திருத்தம் செய்யும் நோக்கில் பின்வரும் அவதானிப்புக்களைச் சமர்ப்பிப்பதற்கு வெளிவிவகார அமைச்சு விரும்புகின்றது.
அதற்கிணங்க அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள இத்தகைய நடவடிக்கைகள் சிறுபான்மையின மக்கள் உட்பட அனைத்து மக்களினதும் உரிமைகளை பாதுகாப்பதற்கான அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச கடமைகளுக்கு அமைவாகவே உள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளை மறுபரிசீலனை செய்வதற்கான செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
இந்த சூழலில், தற்போதுள்ள சட்டங்களை ஆய்வு செய்வதற்கும் தேவையான திருத்தங்களை பரிந்துரைப்பதற்கும் ஒரு அமைச்சரவை உப குழுவை நியமிப்பதற்கான ஏற்பாட்டை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்பதையும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துக் கொண்டுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment