கொலன்னாவை நகர சபை உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதொட்டமுல்ல நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான களஞ்சியத்தில் நிறுவப்பட்டிருந்த இயந்திரமொன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மாஅ திபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை (11) வெல்லம்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொண்ட விசாரணைகளுக்கமைய, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறித்த இயந்திரம் மூன்றாம் தரப்பினருக்கு விற்கப்பட்ட நிலையில், அதனைக் கொள்வனவு செய்த நபர் மற்றும் அதனை போக்குவரத்து செய்த நபர் ஒருவர் ஆகிய இரு சந்தேகநபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், 50, 52 வயதுடைய கொலன்னாவை நகர சபை உறுப்பினர்கள் இருவர் நேற்றையதினம் (15) கைது செய்யப்பட்டதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.
சந்தேகநபர்களை இன்றையதினம் (16) கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, வெல்லம்பிட்டி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment