மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி, பெரியகல்லாறு பகுதியில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த 12 வயது சிறுமியின் முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கை வௌியாகியுள்ளது.
குறித்த சிறுமி நீண்ட காலமாக தாக்கப்பட்டு வந்துள்ளதாகவும் அதனால் ஏற்பட்ட காயங்களூடாக கிருமி உடலுக்குள் சென்றதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணரால் வௌியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு எதிராக மனித படுகொலை வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு நாவலர் வீதியைச் சேர்ந்த 12 வயதான கஸ்மினா எனும் சிறுமி கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
வறுமையின் காரணமாக தாய் வெளிநாடு சென்ற காரணத்தால், குறித்த சிறுமி தனது தாயின் சகோதரியின் பராமரிப்பிலேயே வளர்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சிறுமி, சித்தியின் வீட்டிலேயே சடலமாக மீட்கப்பட்டிருந்தார். சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டதுடன், இவர்களில் மூவர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுமி மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதன் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியினால் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment