ரஞ்சன் ராமநாயக்கவின் மனுவை பரிசீலிக்கலாமா : உத்தரவை 31 ஆம் திகதி வழங்க நீதிமன்றம் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 24, 2021

ரஞ்சன் ராமநாயக்கவின் மனுவை பரிசீலிக்கலாமா : உத்தரவை 31 ஆம் திகதி வழங்க நீதிமன்றம் தீர்மானம்

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குவது தொடர்பான நடவடிக்கையை இரத்து செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி ரஞ்சன் ராமநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் பிறப்பித்து, அதனை பரிசீலனைக்கு எடுப்பதற்கான அனுமதியை வழங்குவதா, இல்லையா என்ற உத்தரவை எதிர்வரும் 31 ஆம் திகதி வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

தமது சேவை பெறுநர் தொடர்ந்து 03 மாதங்களுக்கு பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளாவிடின், அவரின் பதவி இரத்து செய்யப்படும் என்பதை கருத்திற்கொண்டு விரைவாக நீதிமன்ற உத்தரவை பிறப்பிக்குமாறு ரஞ்சன் ராமநாயக்க சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ மன்றில் கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கையை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அர்ஜுன ஒபேசேகர, நீதிமன்ற உத்தரவை பிறப்பிப்பதற்கான திகதியை அறிவித்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உயர் நீதிமன்றத்தால் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 04 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வதற்குரிய நடவடிக்கையை இரத்து செய்யுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு உத்தரவிடக்கோரி ரஞ்சன் ராமாநாயக்கவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment