ஒரே நாளில் 114 பேர் சுட்டுக் கொலை - மியன்மார் இராணுவத்தின் மிருகத்தனமான செயல்.! - News View

About Us

About Us

Breaking

Saturday, March 27, 2021

ஒரே நாளில் 114 பேர் சுட்டுக் கொலை - மியன்மார் இராணுவத்தின் மிருகத்தனமான செயல்.!

மியன்மாரின் பாதுகாப்புப் படையினர் ஒரே நாளில் 114 பேரை சுட்டுக் கொன்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மியன்மாரில் கடந்த மாதம் 1ஆம் திகதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து விட்டு ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

அப்போது முதல் அந்த நாட்டு மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக தினம்தோறும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டத்தை ராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.

மியன்மாரின் இரண்டாவது நகரமான மாண்டலேயில் சுட்டுக் கொல்லபட்ட 13 பேரில் ஐந்து பேர் இளைஞர்கள் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மதியம் 2.30 மணியளவில் நாடு முழுவதும் மொத்தம் 91 பேர் கொல்லப்பட்டதாக மியன்மார் நவ் செய்தி போர்டல் தெரிவித்துள்ளது.

மியன்மாரின் மிகப்பெரிய நகரமான யாங்கோனின் இன்சீன் மாவட்டத்தில் நடந்த ஒரு போராட்டத்தில் 21 வயதுக்குட்பட்ட கால்பந்து வீரர்  ஒருவர் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டதாக ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இராணுவம் மக்களைப் பாதுகாக்கும் என்றும் ஜனநாயகத்திற்காக பாடுபடும் என்றும் கூறிய ஜெனெரல் மின் ஆங் ஹேலிங் கூறிய மறுநாளே, அவரின் கூற்றுக்கு முரண்பாடாக இந்த மிருகத்தனமான தாக்குதல் நடந்து உள்ளது. 

மியன்மாரின் ஆயுதப்படை தினத்தை கொண்டாடவிருப்பதால், அதற்கு இடையூறு செய்யும் விதமாக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களது தலையில் அல்லது பின்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் என நேற்று முன்தினம் ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 114 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதனையடுத்து மியன்மாரின் ஆயுதப்படை தினமான நேற்று உண்மையில் "வெட்கக்கேடான நாள்" என்று பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்களால் உருவாக்கப்பட்ட போராட்டக் குழுவான சிஆர்பிஎச் இன் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment