நிறைவேற்றப்பட்ட பிரேரணையை செயற்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது - புர்கா, நிகாப் விவகாரத்தாலேயே பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை : சரத் வீரசேகர - News View

Breaking

Post Top Ad

Saturday, March 27, 2021

நிறைவேற்றப்பட்ட பிரேரணையை செயற்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது - புர்கா, நிகாப் விவகாரத்தாலேயே பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை : சரத் வீரசேகர

(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையிலுள்ள விடயங்களை செயற்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. பரிந்துரைகளை செயற்படுத்துமாறு எவராலும் அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கவும் முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணை குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது. இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஒருதலைப்பட்சமானவை.

இறுதிக்கட்ட யுத்தத்தில் மனித உரிமை மீறல் இடம்பெற்றதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் மாத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை தொடர்பில் இதுவரையில் எவ்வித சாட்சியங்களும் எத்தரப்பினராலும் முன்வைக்கப்படவில்லை.

இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் நடுநிலையான தன்மையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் மனித உரிமை பேரவை கவனத்திற் கொள்ளாமை பேரவையின் நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமையால் நாட்டு மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இதனால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. 30/1 பிரேரணைக்கு வழங்கிய இணையனுசரணையிலிருந்து அரசாங்கம் விலகியமை சாதகமாக காணப்படுகிறது.

நாட்டுக்கு துரோகமிழைக்கும் வகையில் நல்லாட்சி அரசாங்கம் 30/1 பிரேரணைக்கு இணையனுசரனை வழங்கியது. இதன் காரணமாகவே 30/1 பிரேரணையில் குறிப்பிடப்பட்ட ஒரு சில விடயங்களை செயற்படுத்த நேரிட்டது.

தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையின் விடயங்களை செயற்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. பரிந்துரைகளை செயற்படுத்துமாறு எத்தரப்பினரும் அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கவும் முடியாது.

தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டே புர்கா, நிகாப் ஆகியவற்றை தடை செய்யும் யோசனை முன்வைக்கப்பட்டது. இவ்விவகாரம் காரணமாகவே பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும் பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நான்கு முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தமை பாரிய வெற்றியாகும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad