சீனாவுடனான தொடர்புகளைப் பேணும்போது இலங்கை இழைத்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளோம் - பங்களாதேஷ் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 27, 2021

சீனாவுடனான தொடர்புகளைப் பேணும்போது இலங்கை இழைத்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளோம் - பங்களாதேஷ்

சீனாவுடனான தொடர்புகளைப் பேணும்போது இலங்கை இழைத்த தவறுகளிலிருந்து தமது நாடு பாடம் கற்றுக் கொண்டுள்ளதாக பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் வெளிவிவகார ஆலோசகர் கௌஹர் ரிஸ்வி தெரிவித்துள்ளார்.

அதுமாத்திமன்றி சீனாவுடனான தொடர்புகளின் போது மிகவும் சீரானதும் சரிவர அளவீடு செய்யப்பட்டதுமான முதலீட்டுக் கொள்கையையே தாம் பின்பற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா தனது 'கடன் பொறி' மூலோபாயத்தைப் பயன்படுத்தி அபிவிருத்தியடைந்து வருகின்ற மற்றும் அபிவிருத்தியடையாத நாடுகளைக் கவர்ந்திழுக்கும் வேளையில், இவ்வாறானதொரு கருத்து வெளியாகியிருப்பதாக சர்வதேச ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை மற்றும் கிழக்கு ஆபிரிக்க நாடான ஜிபோட்ரி போன்ற நாடுகள் சீனாவிடம் பெற்ற கடனை மீளச் செலுத்துவதற்கான ஆற்றலை இழந்துள்ளமையால் அவற்றின் சொத்துக்கள் மீதான கட்டுப்பாட்டை சீனாவிற்கு வழங்குவதற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளமையில் இருந்து தமது நாடு பாடம் கற்றுக் கொண்டுள்ளதாக ரிஸ்வி தெரிவித்துள்ளார்.

சீனாவிடம் ஜிபோட்ரி பெற்ற கடனின் பெறுமதி, அந்நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 70 சதவீதமானவற்றையும் விட அதிகமாகும் என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

மேலும் 'எமது நாட்டின் இறையாண்மையை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதை நாம் நன்கு அறிந்துள்ளோம்.

விடுதலையை இலக்காகக் கொண்ட போராட்டத்தின் ஊடாக நாம் தற்போது சுதந்திர நாடாக மாற்றமைந்துள்ளோம்.

ஆகவே எமது பெறுவனவுகளைச் சரிவரக் கண்காணிக்கும் அதேவேளை, வெளிநாடுகளிடமிருந்து பெறும் கடன்களை மீளச் செலுத்தக் கூடிய எமது ஆற்றல் தொடர்பிலும் மிகுந்த அவதானத்துடன் இருக்கின்றோம்' என்றும் பங்களாதேஷ் பிரதமரின் வெளிவிவகார ஆலோசகர் ரிஸ்வி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment