இந்தியாவினால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ள கொவிட்-19 தடுப்புக்கான கொவிட்ஷீல்ட் தடுப்பூசியை, மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளையொட்டி கடமையாற்றும் சுகாதாரத் துறையினர், ஆசிரியர்கள் மாத்திரமன்றி, பெருந்தோட்ட மக்களுக்கும் முதியோருக்கும் முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக் கொடுக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறு, பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், சுகாதாரத் துறையினரிடம் வலியுறுத்தியுள்ளார்.
கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு இலக்காகியுள்ள நாடுகளின் பட்டியலில், குளிருடனான காலநிலையையொத்த நாடுகளிலேயே பெரும்பாலும் இந்த வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.
அந்த வகையில், இலங்கையின் மலையகப் பிரதேசங்களில் காணப்படும் குளிருடன் கூடிய காலநிலையானது, இந்த கொவிட்-19 வைரஸ் தொற்றுப் பரவலை அதிகரிக்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சநிலை உள்ளது.
தவிர, இந்நாட்டில் கொத்தணி வாழ்க்கையை வாழ்ந்துவரும் மலையகப் பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு மத்தியில், இந்த வைரஸ் பரவல் அதிக வேகத்தில் பரவக்கூடிய வாய்ப்பும் காணப்படுகின்றது.
அதுமாத்திரமன்றி, அம்மக்களுடன் மக்களாகக் கடமையாற்றும் சுகாதாரத் துறையினர், ஆசிரியர்கள் உள்ளிட்ட தரப்பினர், பெரும்பாலும் பிரதேசம் தாண்டிச் சென்று கடமையாற்றுபவர்களாகவே அதிகளவில் காணப்படுவதால் அவர்களூடாகத் தொற்றுப் பரவல் ஏற்படும் வாய்ப்புகளும் காணப்படுகின்றன. அவ்வாறான சில சம்பவங்களை, கடந்த காலங்களில் அவதானிக்கவும் நேர்ந்தது.
அதனால், மலையக மக்களின் நலன் தொடர்பில் அதிக கரிசனை கொண்டு அம்மக்களுக்கும் அங்குள்ள முதியோர்களுக்கும், அவர்கள் மத்தியில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் மேற்படி தடுப்பூசியைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, சுகாதாரத் துறையினரிடம் செந்தில் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, மலையகத்துக்கு விநியோகிக்க ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ள தடுப்பூசிகளை விட அதிகமான தொகையை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment