உலக வல்லரசு நாடுகளுடன் ஈரான் செய்து கொண்ட அணு ஒப்பந்தத்தில் மாற்றங்களை கொண்டுவருவது அல்லது பங்கேற்பு நாடுகளில் மாற்றங்கள் ஏற்படுத்துவதை ஈரான் வெளியுறவு அமைச்சு நிராகரித்துள்ளது.
ஈரானுடனான புதிய பேச்சுவார்த்தைகளில் சவூதி அரேபியாவும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மெக்ரோன் கூறிய நிலையிலேயே ஈரான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
“2231 இன் ஐ.நா பாதுகாப்பு கெளன்சில் தீர்மானத்தின் மூலம் உறுதி செய்யப்பட்ட பல தரப்பு சர்வதேச ஒப்பந்தம் ஒன்றான அணு ஒப்பந்தம், பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதல்ல என்பதோடு அதன் தரப்புகள் தெளிவாகவும் மாற்றத்திற்கு உட்படாததாகவும் உள்ளது” என்று ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் சயீட் காதிப் சதாஹ் அந்நாட்டு அரச ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கையில் இருந்து 2018 ஆம் ஆண்டு விலகிய அமெரிக்கா ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவந்ததை அடுத்து உடன்படிக்கையில் உள்ள கட்டுப்பாடுகளை மீறி ஈரான் யூரேனிய செறிவூட்டல் அளவை அதிகரித்தது.
ஈரான் இந்த உடன்படிக்கையை முழுமையாக கடைப்பிடித்தால் மாத்திரமே அமெரிக்கா அதில் மீண்டும் இணையும் என்று அந்நாட்டின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான தடையை அமெரிக்கா தளர்த்தாதவரை தமது முடிவை மாற்றுவதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பிலான எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் வளைகுடா அரபு நாடுகள் இணைக்கப்பட வேண்டும் என்று சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் வலியுறுத்தியுள்ளன.
சவூதி மற்றும் ஈரான் பிராந்தியத்தில் பல மறைமுகப் போர்களில் ஈடுபட்டு வருகின்மை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment