நாசிவன்தீவில் இரவு வேளையில் வந்து மணல் அகழ்வதற்கு முற்பட்ட கும்பல் - ஒன்றிணைந்து தடுக்க போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் - News View

About Us

Add+Banner

Monday, February 1, 2021

demo-image

நாசிவன்தீவில் இரவு வேளையில் வந்து மணல் அகழ்வதற்கு முற்பட்ட கும்பல் - ஒன்றிணைந்து தடுக்க போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

Sand-Mining
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் நாசிவன்தீவு கிராமத்தில் மணல் அகழ்வு மற்றும் மணல் கழுவுதல் திட்டத்தினை உடனடியாக நிறுத்துமாறு வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு மீண்டும் மணல் அகழப்பட்டு வாகனத்தில் ஏற்றிக் கொண்டு செல்வதற்கு தயாரான நிலையில் பொதுமக்கள் ஒன்றிணைந்து தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் நாசிவன்தீவு கிராமத்தில் அமைக்கப்பட்ட இலங்கை மீன்பிடித்துறை துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் மணல் அகழ்வு மற்றும் மணல் கழுவுதல் திட்டத்தினை நிறுத்துமாறு பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், விசேட ஒன்றுகூடல் செயலக கேட்போர் கூடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அத்திட்டத்தினை உடனடியாக நிறுத்துமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மணல் அகழ்வு மற்றும் மணல் கழுவுதல், மணலை ஏற்றிச் செல்லல் போன்ற வேலைகளை உடனடியாக நிறுத்துமாறு கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதை பொருட்படுத்தாமல் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு வாகனத்தில் மணல் ஏற்றப்பட்டு கொண்டு செல்வதற்கு தயாரான நிலையில், அதனைக் கேள்வியுற்ற பிரதேச பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடனடியாக மணல் ஏற்றுவதை நிறுத்துமாறு கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையைடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தலைமையிலான பொலிஸார் வருகை தந்து மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி ஏற்றப்பட்ட மணலை ஏற்றிய இடத்தில் மீண்டும் கொட்டுமாறு கேட்டுக் கொண்டனர். 

மணல் ஏற்றியவர்களை உடனடியாக குறித்த இடத்தில் இருந்து உடைமைகளுடன் வெளியேறுமாறு பொலிஸாரால் பணிப்புரை வழங்கப்பட்டது.

சம்பவ இடத்தில் ஒன்றுகூடிய வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான கே.குணசேகரன், க.கமலநேசன், பிரதேச இளைஞர்கள் உட்பட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

இச்சம்பவம் மீண்டும் இடம்பெறாத வண்ணம் உரிய அரச அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அத்தோடு இலங்கை மீன்பிடித்துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் மணல் கழுவுதல் மற்றும் அகழ்வாராய்ச்சி திட்டத்தை நிறுத்துமாறு கோரி பிரதேச இளைஞர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் தங்களை புலனாய்வுத் துறையினர் விசாரணை செய்து வருவதாக இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *