ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அ.தி.மு.க கொடி பறக்க விட்டு வந்தார் சசிகலா! - News View

About Us

About Us

Breaking

Monday, February 1, 2021

ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அ.தி.மு.க கொடி பறக்க விட்டு வந்தார் சசிகலா!

சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவின் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கின்றது. வைத்தியசாலையில் இருந்து வெளிவந்த முதல் நாளியே ஜெயலலிதா பயன்படுத்திய காரில் சசிகலா வந்துள்ளார். அதிலும் அந்த காரில் அ.தி.மு.க கொடி பறக்க விட்டு வந்திருக்கிறார் சசிகலா. இதனால் அ.தி.மு.க வட்டாரமே கலக்கமடைந்துள்ளது.

விக்டோரியா வைத்தியசாலையில், 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று டொக்டர்கள் சசிகலாவுக்கு அறிவுறுத்திய நிலையில், சசிகலா வைத்தியசாலையில் இருந்து வெளியேறும் செய்திகள் 4 நாட்களுக்கு முன்னரே வந்த வண்ணம் இருந்தன.

சசிகலா நேற்று சென்னைக்கு வர இருப்பதாக செய்திகள் உறுதியாகின. சசிகலாவை வரவேற்க அ.ம.மு.கவில் மிகப் பெரிய வரவேற்புக்கு ஒரு வாரமாகவே தடபுடல் ஏற்பாடுகள் நடந்து வந்தன. சசிகலாவின் கார் வரும் வழி முழுக்க உற்சாக வரவேற்பை தர வேண்டும் என்றும் முடிவாகியது. 

அதன்படியே நேற்று நண்பகல் 12 மணிக்கு சசிகலா வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார். அவரை அழைத்து செல்வதற்காக டி.டி.வி தினகரன் ஆஸ்பத்திரிக்கு வந்தார். சசிகலாவுக்கு தனியாக ஒரு கார் தயார் செய்யப்பட்டிருந்தது. சசிகலா காரில் ஏறி அமர்ந்தார். அப்போது அவரது ஆதரவாளர்களின் முழக்கம் விண்ணைப் பிளந்தது.

சசிகலாவுக்குச் சொந்தமான அந்தக் காரின் முன்பக்கத்தில் அ.தி.மு.க கொடி கட்டப்பட்டிருந்தது. சசிகலா கார் முன்னே செல்ல, அவரை பின் தொடர்ந்து தினகரன் உள்ளிட்டோர் காரில் சென்றனர். மேலும் தொண்டர்களும், சசிகலாவின் ஆதரவாளர்கள் அதிகமாக குவிந்து விட்டதால், போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

அ.தி.மு.க கொடி கட்டப்பட்ட காரில் சசிகலா சென்றது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதலையான பிறகு அ.தி.மு.கவை சசிகலா மீட்டெடுப்பதே முதல் வேலையாக இருக்கும் என்று அ.ம.மு.க தரப்பில் தொடந்து கூறப்பட்டு வரும் நிலையில், காரில் அ.தி.மு.க கொடி பறப்பது மேலும் எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது.

இதில் இன்னொரு விசேஷமும் உள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது இந்தக் காரைத்தான் பயன்படுத்தி வந்தார். இது ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவன கார் என்று கூறப்படுகிறது. காரின் எண் டி.என் 09 3737 என்பதாகும். இந்த கார் எண்ணின் கூட்டுத் தொகை 2 ஆகும். இதிலும் ஒரு முக்கியமான விடயம் இருக்கிறது.

அதாவது ஜெயலலிதாவுக்கு ஒரு காலத்தில் 9, 5, 7 ஆகிய எண்கள்தான் ராசி எண்களாக இருந்தன. கூட்டுத்தொகை அது போல வருவதாக பார்த்துக் கொள்வார். அதேபோல 2 என்ற எண் சசிகலாவுக்கு ராசியான எண்ணாகும். ஜெயலலிதாவும் இதையே ராசி எண்ணாகவும் தனது கடைசி நாட்களில் வைத்துக் கொண்டார்.

கர்நாடக மேல் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு பிணை கிடைத்த திகதி 11 ஆகும். அதேபோல மே 11ஆம் திகதி நடந்த சட்ட சபை தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றதால் 11 அல்லது 2 என்ற எண் அவருக்கு ராசியாக மாறியது. சசிகலாவும் இதையே தனது ராசி எண்ணாக பின்னாளில் மாற்றிக் கொண்டார்.

இந்தக் காரைத்தான் நேற்று சசிகலாவும் மருத்துவமனையிலிருந்து வந்த போது பயன்படுத்தியுள்ளார். அன்று அந்தக் காரில் தேசியக் கொடி பறந்தது. இன்று அ.தி.மு.க கொடி பறந்தது.

கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ள சசிகலா வீட்டு தனிமையில் இருக்க வேண்டும் என்று டொக்டர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள். இதனால், அவர் உடனடியாக பெங்களூரில் இருந்து சென்னைக்கு வர வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. 

பெங்களூரிலேயே சில நாட்கள் ஓய்வெடுப்பார் என்று கூறப்படுகிறது. பெங்களூரில் சசிகலா ஒரு வாரம் தங்குவதற்காக ஹெப்பல் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு பார்க்கப்பட்டுள்ளது. அங்குதான் ஒரு வாரம் சசிகலா தங்குகிறார். அதன் பிறகு சென்னைக்கு சசிகலா திரும்புவார் என்று அ.ம.மு.கவினர் தெரிவித்தனர்.

சசிகலா தங்க உள்ளதால் அந்த பகுதியில் அ.ம.மு.க.வினர் வாகனங்களில் அதிக அளவில் முகாமிட்டுள்ளனர்.

சசிகலா இந்த ஒரு வாரத்தில் அரசியல் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கலாம் என்பதுடன் அவரது தீவிர ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தவும் வாய்ப்பு உள்ளது. சென்னை வரும் போது சசிகலா முக்கிய முடிவுகளை எடுத்துதான் வருவார் என்று அ.ம.மு.கவினர் நம்புகின்றனர்.

சசிகலா மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட வாய்ப்பில்லை என அ.தி.மு.க நிர்வாகிகள் கூறி வந்தாலும், சசிகலாவை வரவேற்க தமிழகத்தின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய அதே காரில், அ.தி.மு.க கொடியை பறக்க விட்டபடி சசிகலா சென்றுள்ளது அ.தி.மு.கவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் அ.தி.மு.கவின் ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்ட அமைச்சர் ஜெயக்குமார், அ.இ.அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக இல்லாத சசிகலா எப்படி கட்சிக் கொடியை பயன்படுத்த முடியும்? இது சட்டத்திற்குப் புறம்பானது என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment