(இராஜதுரை ஹஷான்)
கொழும்பு துறைமுகத்தை பாதுகாக்கும் பொருட்டு அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. ஜனநாயக ரீதியில் கருத்து தெரிவிக்கும் உரிமை அனைத்து தரப்பினருக்கும் உண்டு. தற்போதைய முரண்பாடு அரசாங்கத்திற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. கிழக்கு முனைய விவகாரத்தில் அனைத்து தரப்பினரதும் ஆதரவான மற்றும் எதிரான கருத்துக்கள் ஆராயப்படும் என வன சமுர்த்தி, மனை பொருளாதாரம் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அநுராதபுர நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுகிறது. அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இந்திய நிறுவனத்துக்கு கிழக்கு முனையத்தை வழங்குவது குறித்து முன்வைக்கப்பட்ட யோசனைக்கு பலர் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
கிழக்கு முனையத்தை பிற நாட்டவர்களுக்கு வழங்குவதில்லை என ஜனாதிபதி, பிரதமர் பகிரங்கமாக நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார்கள்.
கிழக்கு முனையத்தை விற்பதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டால் கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும 10 கட்சிகள் குறிப்பிட்டுள்ளன. கருத்து சுதந்திரம் அனைத்து தரப்பினருக்கும் பொதுவாக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் சுதந்திரமான முறையில் செயற்படுகிறார்கள். அவர்கள் வகிக்கும் கட்சி கொள்கைளை பகிரங்கமாக வெளிப்படுத்துகிறார்கள். ஆளும் தரப்பின் 10 கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்ப்பினை வெளிப்படுத்துவதால் அரசாங்கத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
அரசாங்கத்தை பலவீனப்படுத்தவது இவர்களின் நோக்கமல்ல. அரசாங்கம் மக்களின் கருத்து சுதந்திரத்திற்கு தடை விதித்துள்ளது என்று குறிப்பிடப்படும் விடயம் இதன் மூலம் பொய்யாக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும். அனைத்து தரப்பினரது கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கப்பட்டு சிறந்த தீர்மானம் எடுக்கப்படும். கடந்த அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்பட்டதை போன்று இந்த அரசாங்கம் செயற்படாது என்றார்.
No comments:
Post a Comment