(எம்.நியூட்டன்)
வட பகுதி துறைமுக அபிவிருத்தி தென் பகுதி மீனவா்களுக்கே பெரும் வரப்பிரசாதம். வட பகுதி மீனவர்களுக்கு ஆட்கடல் தொழில் மூறையில் வசதி வாய்ப்புக்கள் ஏற்படுத்தி கொடுக்கப்பட வேண்டும் என கலாநிதி சூசைஆனந்தன் தெரிவித்தார்.
வட பகுதியில் கடற்றொழில் அபிவிருத்திக்காக பாரிய துறைமுகங்கள் அமைக்க உள்ளதாக கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வட பகுதியில் பருத்தித்துறை மற்றும் பேசாலை ஆகிய இடங்களில் கடற்றொழில் அபிவிருத்திக்காக பாரிய துறைமுகங்கள் அமைக்க உள்ளதாக கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அபிவிருத்திக்கு குறிப்பாக ஆழ்கடல் மீன்பிடித் தொழிலின் அபிவிருத்திக்கு துறைமுகங்கள் மிக அவசியமான ஒன்று என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
ஆயினும் வடக்கில் அமையவுள்ள துறைமுகங்கள் முக்கியமாக பருத்தித்துறையில் அமையவுள்ள துறைமுகத்தால் அப்பகுதி மீனவர்கள் அடையும் நன்மைகளை விட ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் தென் பகுதி மீனவர்களுக்கே அதிக நன்மையாகவும் பெரும் வரப்பிரசாதமாகவும் அமையும்.
தெற்கிலே ஏறத்தாழ நாலாயிரத்துக்கும் அதிகமான பல நாட்கலங்கள் ஆழ்கடல் மீன்பிடியில் தற்போது ஈடுபட்டு வருகின்றன. அப்படகுகளுக்கு தெற்கு கரையோரங்களிலும் கிழக்கு கரையோரங்களிலும் போதியளவு வசதியான மீனபிடித் துறைமுகங்கள் காணப்படுகின்றன.
இதனால் தெற்கு மற்றும் மேற்கு பகுதி சார்ந்துள்ள ஆழ்கடலில் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் படகுகள் பொருட்களை ஏற்றி இறக்கவும் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பாகவே அமைந்துள்ளன.
கிழக்கில் ஓலுவில், வாழைச்சேனை மற்றும் திருகோணமலையில் உள்ள துறைமுகங்களும் கிழக்கு கடற்பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் மீனவர்களுககு உரிய சேவைகளை வழங்கி வருகின்றன.
இருந்தபோதிலும் வடக்கில் பேதுரு மேடை மற்றும் வங்காள விரிகுடாப் பகுதியில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் மீனவர்களுக்கு வசதியான மீனபிடித் துறைமுகங்கள் எவையும் இல்லாதிருப்பது தென் பகுதி மீனவர்களுக்குப் பெரும் குறையாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் பருத்தித்துறையில் துறைமுகம் அமையுமாயின் அது அவர்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாகவே அமையும். அவசர அவசரமாக மைலிட்டித் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டமை தென் பகுதி மீனவர்களை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்பட்டது என்பதும் கவனிக்கத்தக்கது.
இன்று அவர்களுக்கே மைலிட்டி வாய்ப்பாக அமைந்துள்ளது. வடக்கில் தென் பகுதி போன்று ஆழ்கடல் மீன்பிடி பாரியளவில் விருத்தி பெறவில்லை. மிகக்குறைந்த எண்ணிக்கையிலான வலுக்குறைந்த படகுகளே ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றன.
பாரிய முதலீடு (100 இலட்சம்) மற்றும் போதிய பயிற்சி, மாலுமி, சாஸ்திரம், தொடர்பு சாதனங்களை இயக்கும் ஆற்றல் இதில் ஈடுபடுகாருக்கு அவசியம்.
இத்தகைய வசதிகள் செய்து கொடுக்காத வரையில் வடக்கில் ஆழ்கடல் மீன்பிடி அபிவிருத்தி சாத்தியமில்லை. இப்போதுள்ள அரசியல் சூழலில் துறைமுகம் அமையுமாயின் அது துறைமுக கூட்டுத்தானத்தின் கீழ் போவதுடன் அதன் பாதுகாப்புக்கு பொலிஸ் நிலையம் மற்றும் கடற்படையினரின் பாவனையும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் நிறையவே உண்டு.
அங்கு ஏற்படுத்தப்படும் வேலை வாய்ப்புக்கள் யாரைப்போய்ச் சேரும் என்பதெல்லாம் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
இப்பகுதியில் துறைமுகம் அவசியமும் தேவையும் கூட. ஆனால் அமையப்போகும் துறைமுக அபிவிருத்தி வட பகுதி மீனவர்களுக்கு நன்மை பயக்குமோ இல்லையோ தென் பகுதி மீனவர்களுக்கு பசித்திருப்போருக்கு பாயாசத்தோடு விருந்து வைத்த மாதிரி அமையும் என்பதே எமது கருத்து. முடிவை வட பகுதி மீனவர்களே எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment