உகான் உணவு சந்தையை பார்வையிட்ட உலக சுகாதார நிபுணர் குழு - News View

About Us

About Us

Breaking

Monday, February 1, 2021

உகான் உணவு சந்தையை பார்வையிட்ட உலக சுகாதார நிபுணர் குழு

கொரோனா வைரஸ் தோன்றியது எப்படி என்று ஆய்வு செய்ய சீனாவின் உகான் நகருக்கு சென்றுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு அங்குள்ள உணவு சந்தையை நேரில் பார்வையிட்டது.

சீனாவின் உகான் நகரில்தான் கொரோனா வைரஸ் முதன் முதலில் தோன்றியது. ஆனால், இதை சீனா மறுத்து வருகிறது. கொரோனா தோன்றியது எப்படி என்று விசாரணை நடத்த ஒரு நிபுணர் குழுவை உலக சுகாதார நிறுவனம் நியமித்துள்ளது.

இந்த நிபுணர்கள், கால்நடை மருத்துவம், தொற்று நோய் ஆய்வு, உணவு பாதுகாப்பு, கொள்ளை நோய் ஆய்வு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்கள் ஆவர்.

இந்த குழு, சீனாவுக்கு வந்து விசாரணை நடத்துவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஒருவழியாக சமீபத்தில் சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து, நிபுணர் குழு சீனாவுக்கு சென்றது. 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு 29ஆம் திகதி தனது விசாரணையை தொடங்கியது.

கொரோனாவுக்கு எதிரான சீனாவின் ஆரம்ப கால அனுபவத்தை விளக்கும் அருங்காட்சியகத்தை அவர்கள் பார்வையிட்டனர். சீன விஞ்ஞானிகளிடம் விசாரணை நடத்தினர்.

ஆரம்ப காலத்தில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்ற 2 ஆஸ்பத்திரிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில், 3ஆவது நாளாக நேற்றும் உகான் நகரில் அவர்களது ஆய்வு தொடர்ந்தது. அங்குள்ள பெரிய உணவு சந்தைகளில் ஒன்றான பைஷாசூ மார்க்கெட்டுக்கு நேரில் சென்றனர். இந்த மார்க்கெட்டில் விலங்குகள் உணவுக்காக உயிருடன் விற்கப்படுகின்றன. இந்த விலங்குகளில் இருந்து கொரோனா பரவி இருக்கலாம் என்று பரவலாக கருதப்படுகிறது.

பொது முடக்க காலத்தில்கூட உகான் நகர் முழுவதற்கும் இங்கிருந்துதான் உயிரினங்கள் வினியோகிக்கப்பட்டன. அந்த மார்க்கெட்டை பகுதி பகுதியாக நிபுணர் குழுவினர் நடந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது, சீன அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

உகான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டுக்கும் செல்ல நிபுணர் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அங்குதான் கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.

இருப்பினும், இந்த ஒரு பயணத்திலேயே கொரோனாவின் தோற்றம் பற்றி கண்டுபிடித்து விட முடியுமா என்று பல தரப்பிலும் சந்தேகம் எழுப்பப்படுகிறது.

No comments:

Post a Comment