சுதந்திர தினத்தை முன்னிட்டு முஸ்லிம்கள் அனைவரும் தேசிய கொடியை ஏற்றுமாறும் எமது நாட்டின் மீதான அசைக்க முடியாத விசுவாசத்தை வெளிப்படுத்துவதில் ஏனைய சகோதர சமூகங்களுடன் கைகோர்க்குமாறும் உலமா சபை உள்ளிட்ட நாட்டிலுள்ள சகல முஸ்லிம் அமைப்புகள், இயக்கங்கள் இணைந்து கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.
இதில் தரீக்கா உயர்பீடம், ஜமாஅத்தே இஸ்லாமி, சூரா கவுன்ஸில், மலே மாநாடு, தாவூத் போரா அமைப்பு உட்பட பல அமைப்புகள் உள்ளடங்குகின்றன.
இந்த கூட்டறிக்கையில் மேலும் கோரப்பட்டுள்ளதாவது, இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் 4 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இது இந்த நாட்டில் வாழும் சகல பிரஜைகளுக்கும் வரலாற்றுபூர்வமான மற்றும் மகிழ்ச்சிகரமான தருணமாகும்.
எங்கள் தாய்நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ, மலாய், பறங்கி மற்றும் பிற சமூகங்களை உள்ளடக்கியது. சுதந்திர தினத்தை அது நிகழ்ந்த தினத்தில் காணப்பட்ட சாதனை உணர்வுடன் நோக்க வேண்டும்.
எம்மை நாமே ஆட்சி செய்வதற்கும் சுதந்திர தேசமாக நமது சொந்த இறையாண்மையை அனுபவிக்கவும் நமக்கு அதிகாரம் உள்ளது. கிடைத்த சுதந்திரத்தை பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. எமது சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்யவோ பிழையாக பயன்படுத்தவோ கூடாது.
எமது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று கலாசார, மத, இன வேறுபாடுகள் போன்ற விடயங்களில் அனைத்து பிரஜைகளினதும் ஜனநாயக உரிமைகளும் முழுமையாக மதிக்கப்படுவதை உறுதி செய்வதன் மூலமும் அனைத்து மக்களினதும் பொருளாதார சமத்துவ மற்றும் சமூக நீதி உறுதி செய்யப்படுவதன் மூலமுமே சுதந்திர உணர்வு பாதுகாக்கப்படுகிறது.
இம்முறை சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் தேசிய கொடியை ஏற்றுமாறும் நாம் வேண்டிக் கொள்கிறோம்.
எமது ஒருமைப்பாட்டை, ஐக்கியத்தை, எமது நாட்டின் மீதான அசைக்க முடியாத விசுவாசத்தை வெளிப்படுத்துவதில் ஏனைய சகோதர சமூகங்களுடன் கைகோர்க்குமாறும் அதில் கோரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment