அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளானது, மேல் நீதிமன்றில் விசாரணையில் உள்ள 61 வழக்குகள் உட்பட 79 வழக்குகளின் பிரதிவாதிகளை விடுதலை செய்ய பரிந்துரை செய்துள்ளதாக ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அவ்வாணைக்குழுவின் அறிக்கையானது நாட்டின் சட்டத்தை குறைத்து மதிப்பிடும் வகையிலும், நீதித்துறை மீது அழுத்தம் பிரயோகிக்கும் வண்ணமும் அமைந்துள்ளதாக அவ்வமைப்பு கூறுகின்றது.
பிட்டகோட்டே, சோலீஸ் மண்டபத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பை நடாத்தி அவ்வமைப்பு மேற்படி விடயங்களை அறிவித்தது.
இதன்போது கருத்து தெரிவித்த அவ்வமைப்பின் உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வட்டகல, அரசியல் பழி வாங்கல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு, ஒரு விடயப்பரப்பு வழங்கப்பட்டிருந்த போதும், விடயப்பரப்புக்கு அப்பால் சென்றும் அவ்வாணைக்குழு வேலைப் பார்த்துள்ளதாக கூறினார்.
'கம்மன்பிலவுக்கு எதிராக மேல் நீதிமன்றிலும் நீதிவான் நீதிமன்றிலும் நிலுவையில் உள்ள வழக்கானது, அவரது தனிப்பட்ட கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புபட்ட விடயமாகும். எனினும் இந்த ஆணைக்குழு, அவரை அனைத்து குற்றச்சாட்டிலிருந்தும் விடுவிக்க பரிந்துரை செய்துள்ளது. அவர் விடயப்பரப்புக்கு உட்பட்ட ஒருவர் அல்ல. அவர் அமைச்சரவை அமைச்சர்.
மற்றொரு சம்பவமும் இதனை ஒத்துள்ளது. மஹிந்த கஹந்தகமகே அவர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர். அவருக்கு எதிராக விசாரிக்கப்பட்டுவரும் வழக்கிலிருந்து அவரை விடுவிக்க பரிந்துரைத்துள்ளனர். பிள்ளையானுக்கு எதிரான சம்பவம், பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்குகளும் அவ்வாறே. இதேபோல் பல சம்பவங்கள் உள்ளன.
இந்த ஆணைக்குழு தனது அதிகாரத்துக்கு அப்பால் சென்று செயற்பட்டமையைக் காட்டுகின்றது. மற்றொரு விடயம்தான், நீதிமன்றம் முன் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பில் இந்த ஆணைக்குழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளமையாகும்.
துமிந்த சில்வாவுக்கு எதிராக வழக்கு விசாரிக்கப்பட்ட விதம் பிழை எனக்கூறி அவரை விடுவிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் உயர் நீதிமன்றில் மேன் முறையீட்டு மனு தொடர்பிலும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தற்போது அரசியல் பழி வாங்கல் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த மற்றொரு ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணைக்குழுவின் தலைவரான நீதியரசர் பிரியந்த ஜயவர்தன, துமிந்த சில்வாவின் மேன்முறையீட்டு மனுவில் மரண தண்டனையை உறுதி செய்த நீதியரசர்கள் குழாமில் இருந்தார். அவர் இவ்வழக்கு தொடர்பில் எவ்வாறான பரிந்துரையொன்றினை வழங்கவுள்ளார் என்பதையே நாமும் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.' என குறிப்பிட்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி கஸ்ஸாலி ஹுசைன், வழக்கொன்றில் ஆஜராகாத, அவ்வழக்கின் ஆவணங்களைக்கூட படித்துப்பார்க்காத ஒருவர் அவ்வழக்கு தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பது முற்றிலும் தவறானது என குறிப்பிட்டார்.
'நானும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் 12 ஆண்டுகள் சேவையாற்றியுள்ளேன். சட்டமா அதிபர் திணைக்களம் விசாரணை அதிகாரிகள் வழங்கும் அறிக்கையை மிகவும் ஆழமாக பகுப்பாய்வு செய்த பின்னரே வழக்குத் தொடுக்கும் நடவடிக்கைகளுக்கு செல்வர்.
வழக்கு தொடுக்கப்பட்ட பின்னர் இரு தரப்பினரையும் மன்றுக்கு அழைத்து சாட்சியங்களை ஆராய்ந்து நீதிமன்றம் தீர்ப்பளிக்கும். குறித்த தீர்ப்பு தொடர்பில் திருப்தியில்லையேன்றால் மேன் முறையீட்டு நடவடிக்கைகளுக்கும் செல்லலாம்.
தற்போது வழக்குகளுடன் தொடர்புபடாத, அவ்வழக்குகள் குறித்த ஆவணங்களை படித்துப்பார்க்காத ஒருவர் அவ்வழக்குகள் தவறானது என கூறுவதை ஏற்க முடியாது.
குற்றப்பத்திரிகை, வழக்கின் தீர்ப்பை தவறானது என கூற முடியாது. இது நீதிமன்றத்துக்கு மட்டுமன்றி, சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் செய்யும் அவமதிப்பாக்கும். வழக்குத் தொடுக்கும் போது இருந்த சந்தர்ப்பம் இப்போது மாற்றம் பெறுவது எப்படி?
இவ்வனைத்து வழக்குகளும் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவை. சட்டமா அதிபரின் தீர்மானத்துடன் நாம் உடன்படவோ, உடன்படாமலோ இருக்கலாம். நீதிச் சேவை கட்டமைப்புக்குள் ஒருவருக்கு போதுமான நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் உள்ளது.
வழக்கொன்றில் பிரதிவாதி, பாதிக்கப்பட்டவர் என இரு தரப்பினர் உள்ளனர். இந்த ஆணைக்குழு அறிக்கையில், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பரிந்துரைந்துள்ளனர். உண்மையில் பாதிக்கப்பட்டவர் அல்லது முறைப்பாட்டாளர் பொய்யுரைத்தாரா என முதலில் விசாரிக்க வேண்டும்.
இல்லாமல், முறைப்பாடொன்று கிடைக்கப் பெற்றமையை மட்டும் வைத்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது. தற்போது பாதிக்கப்பட்டுள்ளோருக்கு தண்டணை வழங்க பரிந்துரைத்துள்ளமையை நாம் எப்படி புரிந்துகொள்வது.
அது நியாயமானதா? அது குறித்த விசாரணைகளை இப்போது செய்வது யார்? அதே பொலிஸார் அல்லவா அது குறித்தும் விசாரிக்க வேண்டும். மீள அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதும் அதே சட்டமா அதிபர் ஊடாக அல்லவா? அப்படியானால் அது சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு செய்யும் அவமதிப்பு அல்லவா? ' என கேள்வி எழுப்பினார்.
இந்த ஊடாகவியலாளர் சந்திப்பின் போது ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரனிகளான உபுல் குமாரப்பெரும, ஹர்ஷன நாணயக்கார, மஞ்சுள பாலசூர்ய, அகலங்க உக்வத்த, சரித் கால்லகே உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment