இலங்கையில் யானை - மனித மோதல் விவகாரம் மீண்டும் கோபா குழுவில் ஆராயப்படவுள்ளது - News View

About Us

About Us

Breaking

Friday, February 19, 2021

இலங்கையில் யானை - மனித மோதல் விவகாரம் மீண்டும் கோபா குழுவில் ஆராயப்படவுள்ளது

இலங்கையில் யானை மனித மோதல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை எதிர்வரும் 23ஆம் திகதி மீண்டும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) ஆராயப்படவுள்ளது.

யானை, மனித மோதலால் உலகில் அதிக எண்ணிக்கையிலான யானைகள் இறக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது என்பது கடந்த டிசம்பர் மாதம் 09ஆம் திகதி கூடிய அரசாங்க கணக்குகள் பற்றிய குழுக்கூட்டத்தில் வெளிப்பட்டது.

யானை, மனித மோதலால் அதிகளவான மனித உயிரிழப்புக்கள் இடம்பெறும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் காணப்படுவதும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இலங்கையில் யானை, மனித மோதல் காரணமாக சராசரியாக வருடமொன்றக்கு உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை 271 ஆகக் காணப்பட்ட நிலையில் கடந்த வருடத்தில் 407 யானைகள் உயிரிழந்திருப்பதாக அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

அத்துடன், யானை, மனித மோதல் காரணமாக வருடமொன்றுக்கு உயிரிழக்கும் மனிதர்களின் எண்ணிக்கை 85ஆகக் காணப்பட்டதுடன், 2019ஆம் ஆண்டில் 122 பேர் உயிரிழந்திருப்பது பற்றிய தகவலும் இங்கு வெளியானது. 

எனவே, யானை, மனித மோதலைக் குறைப்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து கோபா குழு கவனம் செலுத்தியிருந்தது.

இதேவேளை, ஒப்பீட்டளவில் குறைவான மாணவர்களைக் கொண்டுள்ள அரசாங்கப் பாடசாலைகளின் செயற்றிறன் குறித்து எதிர்வரும் பெப்ரவரி 24ஆம் திகதி கோபா குழு ஆராயவிருப்பதுடன், 25ஆம் திகதி இலங்கை சுங்கத் திணைக்களத்தின் செயற்றிறன் குறித்தும் ஆராயப்படவுள்ளது.

No comments:

Post a Comment