கொவிட்-19 கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அதிகமான பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள போர்த்துக்கல்லில் வெளிநாட்டு தாதியர்களை பணியில் அமர்த்துவதற்கான பிரேரணைக்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
விசேட பொது நலனைக் கருத்தில் கொண்டு, அவசரகால நிலையை ஒழுங்குபடுத்தும் ஆணையில் வெளிநாட்டு தாதியர்களை பணிக்கமர்த்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது என போர்த்துக்கல் மாநில அமைச்சர் மரியானா வியேரா டா சில்வா தெரிவித்துள்ளார்.
தொற்று நோயின் விளைவாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காரணமாக நாட்டிற்கு வெளியில் இருந்து தாதியர்களை வேலை செய்ய அனுமதிப்பது மிகவும் முக்கியமானது என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 105 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,944 புதிய நோய்த்தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள்.
வியாழக்கிழமை நிலவரப்படி, கொரோனா வைரஸ் தொற்றுநோயின் ஆரம்பத்திலிருந்து இதுவரை போர்த்துக்கல்லில் மொத்தம் 15,754 உயிரிழப்புகளும், 792,829 நோய்த்தொற்றாளர்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment