(எம்.மனோசித்ரா)
நாட்டில் இரண்டாவது கொரோனா அலை உருவானமைக்கு உக்ரேன் பிரஜைகள் காரணமாக இருக்கலாம் என்று அரசாங்கம் கூறியது. ஆனால் தற்போதும் சுற்றுலாத்துறையை ஆரம்பித்து வைப்பதற்கு அந்நாட்டு பிரஜைகளே வரவழைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் உக்ரைன் பிரஜைகளுடாகவே இலங்கையில் மூன்றாவது கொரோனா அலையும் உருவாகிவிடுமா என்ற சந்தேகம் நிலவுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், மினுவாங்கொடை கொத்தணி இரண்டாம் அலையாக தீவிரமாக பரவியுள்ளது. இதனைத் தொடர்ந்து சிறைச்சாலை கொத்தணி, பொலிஸ் கொத்தணி என பல கொத்தணிகள் உருவாகின. இரண்டாம் அலைக்கு உக்ரேன் பிரஜைகள் சிலரின் வருகை காரணமாக இருக்கும் என்று அரசாங்கம் கூறியது. அவ்வாறெனில் தற்போது அவர்களால் மூன்றாம் அலையும் உருவாகிவிடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது இவ்வாறிருக்க தற்போது உதயங்க கொத்தணியும் உருவாகியுள்ளது. இந்த கொத்தணியில் உக்ரேனிலிருந்து வந்த 6 சுற்றுலா பிரயாணிகளுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆறு பேருக்கும் கொரோனா வைரஸின் புதிய வகை தொற்று பரவியுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 10 இலட்சத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் காணப்படுகின்ற நாடாக உக்ரேன் காணப்படுகிறது.
இவ்வாறிருக்கையில் எதற்காக அந்த நாட்டிலிருந்து சுற்றுலா பிரயாணிகள் வரவழைக்கப்பட்டனர். ஆனால் இந்தியா, பங்களாதேஷ் உள்ளிட்ட பல நாடுகள் வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமது நாட்டு பிரஜைகளை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன.
மிக் கொடுக்கல் வாங்கலை பின்புலமாகக் கொண்டுதான் உக்ரைன் பிரஜைகள் நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளனரா என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது. இந்த அரசாங்கம் தமது சகாக்களுக்கு உதவும் வகையில் பல மோசடிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கு சிறந்த உதாரணம் சீனி வரி நீக்கமாகும். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் அரசாங்கம் எதிர்பார்ப்பது என்ன?
அரசாங்கத்தை நம்பி வாக்களித்த 69 இலட்சம் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். சீனி மாத்திரமல்ல. விலை நிர்யணிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட எந்தவொரு பொருளும் அந்த விலைக்கு மக்களுக்கு விற்பனை செய்யப்படுவதில்லை.
கொவிட் தடுப்பு மருந்தை பெற்றுக்கொள்ள உலக நாடுகள் பொறுப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இலங்கையிலுள்ள அமைச்சர்கள் தடுப்பு மருந்தை பெற்றுக்கொள்ள அவசரப்படத் தேவையில்லை என்றும், சிலர் எமக்கு தடுப்பு மருந்தே தேவையில்லை என்றும் கூறுகிறார்கள்.
கொவிட் கட்டுப்பாடு குறித்து அரசாங்கத்திற்கு எவ்வித அக்கறையும் கிடையாது. மாறாக தமது சகாக்களுக்கு எவ்வாறு பயன் பெற்றுக் கொடுப்பது என்பதிலேயே அரசாங்கம் அவதானம் செலுத்துகிறது. சுற்றுலாத்துறையை ஆரம்பிப்பதாகக் கூறிவிட்டு தற்போது உள்நாட்டு சாரதிகளை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளனர். ஆனால் சுற்றுலா பிரயாணிகள் தமது சுற்றுலாவைத் தொடர்கிறார்கள் என்றார்.
No comments:
Post a Comment