மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 19, 2021

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் கொரோனாவினால் பாதிக்கப்படும் போது அவர்களை பராமரிப்பதற்கு வைத்தியசாலையில் ஒரு இடத்தை ஒதுக்கி தருமாறு கோரிக்கை விடுத்து தாதியர்கள் வைத்தியசாலைக்கு முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (19) ஈடுபட்டனர். 

பொது ஜக்கிய தாதியர் சங்கம், அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் இணைந்து இந்த கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தை ஏற்பாடு செய்தனர். 

இதனையடுத்து வைத்தியசாலையில் கடமையாற்றும் அனைத்து தாதியர்களும் வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்றிணைந்து தாதியர் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து, நிர்வாகம் ஏன் இந்த அசமந்தம். போன்ற வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு காலை 10.00 மணியில் இருந்து சுமார் ஒரு மணித்தியாலயம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் அங்கிருந்து விலகிச் சென்றனர்.

இதன்போது தாதியர் சங்கத் தலைவர் பி. புஸ்பராசா தெரிவிக்கையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதியர்கள் கொரோனா தொற்று நோயாளர்களை தொட்டு கடமையாற்றி வருகின்றோம். இருந்தபோதும் 30 மேற்பட்ட தாதியர்களுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது. 

கடந்த 17 ஆம் திகதி தாதி உத்தியோகத்தர் ஒருவர் தொற்றுக்கு உள்ளாக்கப்பட்டு, சிகிச்சைக்காக காத்தான்குடி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்போது, அங்கு காத்தான்குடி வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜாபீர் மட்டக்களப்பு வைத்தியசாலை தாதியருக்கு அங்கே இடமில்லை காத்தான்குடி வைத்திசாலை ஊழியர்களுக்கு இங்கு இடம் என தெரிவித்துள்ளார்.

இதனால் குறித்த தாதி உத்தியோகத்தர் வைத்தியசாலை வெளிப்படியில் இரவு 11 மணிவரை இருந்துள்ளார். இது தொடர்பாக உடனடியாக பொது ஜக்கிய தாதியர் சங்கம கிழக்கு மாகாண இணைப்பாளர் சசிகரனுடன் தொடர்பு கொண்டு, பிராந்திய சுகாதார பிரதி பணிப்பாளர் அச்சுதன், மற்றும் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அ.லதாகரனுடன் தொடர்பு கொண்டு குறித்த தாதியர் கல்லாறு வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

எனவே நாங்கள் சேவை செய்ய தயாராக இருக்கின்றோம். நோயாளிகளைத் தொட்டு சேவையாற்றவும் தயாராக இருக்கின்றோம். ஆனால் எங்கள் தாதியர்களுக்கு தொற்று ஏற்படும் போது அவர்களை இந்த வைத்தியசாலையில் வைத்து பராமரிப்பதற்கு ஒரு சாதாரண இடத்தை ஒதுக்கி தருமாறு கேட்டுக் கொள்கின்றோம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி கணேசலிங்கம் கலாறஞ்சினி தெரிவிக்கையில் தாதியர் சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர் இதில் தாதியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் போது அவர்களை பராமரிப்பதற்கு வைத்தியசாலையில் ஓர் இடத்தை ஒதுக்கித் தருமாறு கோரியுள்ளனர்.

சுகாதார அமைச்சால் இன்னும் இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை இருந்தபோதும் ஆளுநர் உடன் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கல்லாறு வைத்தியசாலையில் தாதியர்களை சிகிச்சைக்காக வைப்பதற்கு சுகாதார சேவைகள் 10 நாட்களில் அதற்கான நடவடிக்கை எடுப்பதாக உடன்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு தெரியப்படுத்தியுள்ளேன் அவர் எழுத்து மூலம் அனுப்புமாறு கோரியுள்ளர். இருந்தபோதும் இதற்கான நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நிருபர் சரவணன்
வீரகேசரி

No comments:

Post a Comment