(எம்.மனோசித்ரா)
சுற்றுலாத்துறை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் சுற்றுலா பயணிகளிடமிருந்து சமூகத்திற்கும் சமூகத்திலிருந்து சுற்றுலா பயணிகளுக்கும் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான விசேட செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இன்று செவ்வாய்கிழமை இணைய வழியூடாக நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், சுற்றுலாத்துறை தேசிய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனை மீள கட்டியெழுப்புவதற்காக நாளைமறுதினம் முதல் விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.
எனவே எந்தவொரு விமானத்தினூடாகவும் சுற்றுலா வீசா, வதிவிட வீசா உள்ளிட்டவற்றைக் கொண்ட எந்தவொரு நபரும் நாட்டுக்கு வர முடியும். இதற்போது சுற்றுலா பயணிகளிடமிருந்து சமூகத்திற்கும் சமூகத்திலிருந்து சுற்றுலா பயணிகளுக்கும் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான விசேட செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு சிலர் கூறுவதைப் போன்று உக்ரேன் முழுமையாக முடக்கப்படவில்லை. பாடசாலை மற்றும் பொதுக் கூட்டங்கள் உள்ளிட்டவையே இடைநிறுத்தப்பட்டுள்ளன. எனவேதான் அந்நாட்டிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
அத்தோடு அந்த நாட்டிலிலிருந்து வருவதற்கு மாத்திரம் நாம் அனுமதியளிக்கவில்லை. எந்தவொரு நாட்டிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வர முடியும். எவ்வாறிருப்பினும் உக்ரேனிலிருந்து வந்தவர்களால் பாரிய வைரஸ் எதுவும் ஏற்படவில்லை.
விமான நிலையம் திறக்கப்பட்டதன் பின்னர் நாளொன்றுக்கு 2500 சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு வரவழைக்க எதிர்பார்க்கப்படுவதைப் போன்று அவர்களில் தொற்றுறுதி செய்யப்படுவர்கள் இனங்காணப்பட்டால் அவர்களின் மருத்துவம் போன்றவற்றுக்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
சுற்றுலா பயணிகளை அனுமதிக்குமாறு கோரி நாம் எந்தவொரு சுற்றுலாசார் நிறுவனத்திற்கும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை. எனினும் சுகாதார தரப்பினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'பயோ பபல்' செயற்திட்டத்துக்கமைய சுற்றுலா சபையினால் 14 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவை தவிர வேறு இடங்களுக்குச் செல்ல முடியாது என்றார்.
No comments:
Post a Comment