புரெவி சூறாவளியின் தாக்கங்களைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னாயத்தங்கள் தொடர்பாக திருகோணமலை மாவட்ட செயலாளர் சமன் தர்ஷன பண்டித்தகோராள தகவல் தருகையில், கரையோரப் பகுதிகளில் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ள 21 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களை தங்க வைப்பதற்காக 237 முகாமகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நிலைமையை அவதானித்து, இன்று பிற்பகல் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவிருப்பதகவும் அவர் தெரிவித்தார்.
இன்று மாலை அல்லது இரவு கிழக்கு கரையில் தரைதட்டி இலங்கைக்குள் பிரவேசிக்கவுள்ளதாக எதிர்வு கூரப்படும் புரெவி சூறாவளியின் தாக்கங்களைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னாயத்தங்களில் வடக்கு கிழக்கு அரசாங்க அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதைய இடர்நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் பற்றி ஆராய்வதற்காக, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட செயலகங்கள் விசேட கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தன.
இதில் இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள், நியதிச் சபைகள் போன்றவற்றின் அதிகாரிகள் பங்கேற்றார்கள். அத்துடன், பொலிஸார், முப்படையினர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டம் பற்றி மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கே. கருணாகரன் கருத்து வெளியிடுகையில், பிரதேச செயலக மட்டத்தில் முன்னெச்சரிக்கை, மீட்பு, நிவாரண, பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக சகல குழுக்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளதெனத் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருமழை பெய்யவில்லை எனவும் அவர் கூறினார்.
மன்னார் மாவட்ட செயலாளர் நந்தினி ஸ்டான்லி டி மெல் தகவல் தருகையில், இங்கு பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தற்காலிகமாக குடியமர்ந்த சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க சமூக குழுக்களும் உதவி வருவதாக அவர் கூறினார்.
சீரற்ற காலநிலையால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ் மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் ஒலி பெருக்கிகள் மூலம் கிராமங்கள் தோறும் முற்பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
அம்பாறை மாவட்டத்தில் வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிறதென எமது ஊடக அதிகாரி தெரிவித்துள்ளார். மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் அடைமழை பெய்கிறது. திருகோணமலையில் கடல் சீற்றமடைந்துள்தைக் காணக்கூடியதாக இருக்கிறதென அதிகாரி மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment