வங்காள விரிகுடாவில் உருவாகிய புரெவி புயல், இன்று முற்பகல் 11.30 அளவில் தென்கிழக்குத் திசையில் 70 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டிருக்கக் கூடிய சாத்தியம் இருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
புரெவி புயல் பற்றி திணைக்களம் இன்று காலை 9.30 இற்கு விடுத்த சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலில், இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு நாட்டைச்சுற்றி சூறாவளி காற்று நகர்வு 20 வருடங்களுக்கு பின்னர் இடம்பெறுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் 2000 ஆம் ஆண்டில் நாட்டில் சூறாவளி அழுத்தம் ஏற்பட்டதுடன், அதன் பின்னர் சூறாவளி நாட்டுக்கு அருகாமையில் ஏற்பட்ட போதிலும் அதனால் நேரடியான தாக்கம் இலங்கைக்கு ஏற்படவில்லை.
புரெவி புயல் மேற்குத் திசையில் நகர்ந்து இன்று மாலை அல்லது இரவு மட்டக்களப்புக்கும், பருத்தித்துறைக்கும் இடையில் திருகோணமலைக்கு அருகில் தரை தட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புயல் மணிக்கு 75 முதல் 95 கிலோ மீற்றர் வரையிலான வேகத்தில் வீசும் காற்றுடன், மேற்குத் திசையில் நகர்ந்து, மன்னார் குடாவிற்கு செல்லலாம் என எதிர்வு கூரப்படுகிறது.
இந்தத் தொகுதியின் காரணமாக, நாட்டை சூழவுள்ள கடற்பரப்பில் காற்றின் வேகம் மணிக்கு 80 முதல் 100 கிலோ மீற்றர் வரை அதிகரித்து, கடல் மிகவும் கொந்தளிப்பானதாக மாறலாம். கிழக்குக் கரைக்கு அப்பாலுள்ள கடலில் ஒரு மீற்றர் வரையிலான அலைகள் தோன்றி தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ளம் ஏற்படவும் கூடும்.
நாட்டின் உட்பிரதேசங்களைப் பொறுத்த வரையில், நாளை வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் மணிக்கு 80 முதல் 100 கிலோ மீற்றர் வேகத்திலும் வடமேல், மேல், மத்திய மாகாணங்களில் மணிக்கு 60 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்திலும் கடும் காற்று வீசலாம்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேலம் மாகாணங்களின் சில இடங்களில் 150 மில்லி மீற்றரைத் தாண்டிய மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும்.
இன்று தொடக்கம் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடற்போக்குவரத்தில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரையோரத்தில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், பாதிக்கப்பட்ட இடங்களைச் சேர்ந்தவர்கள் வீடுகளுக்குள் தங்கியிருக்குமாறும் கேட்கப்படுகிறார்கள்.
முறிந்து விழக்கூடிய மரங்கள், மின் கம்பங்கள் பற்றி அவதானம் தேவை. இடி மின்னல் தாக்கம் ஏற்படுகையில், கம்பி வழி தொலைபேசிகள், இலத்திரனியல் சாதனங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவசர உதவி தேவைப்படும் பட்சத்தில் தத்தமது பிரதேசங்களைச் சேர்ந்த இடர்காப்பு முகாமைத்துவ நிலைய அதிகாரிகளைத் தொர்பு கொள்ளுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment