(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களின் பிள்ளைகளை கருத்திற்கொண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று மாணவர்களுக்கு இணையத்தள வசதியை அரசாங்கம் செய்துகொடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் கல்வி அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 5 ஆம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களின் பிள்ளைகளை கருத்திற்கொண்டே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2019 மற்றும் 2020 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்திருக்கும் மாணவர்களை பார்க்கும்போது இந்த பரீட்சையின் நோக்கம் நிறைவேற்றப்படுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.
அதாவது, 2019 தரம் 5 புலமைப்பரீட்சைக்கு குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களின் பிள்ளைகள் 61 வீதமானவர்கள் தோற்றி இருந்தார்கள். அதில் 41 வீதமானவர்கள் சித்தியடைந்திருந்தார்கள். அதேபோன்று வருமானம் கூடிய குடும்பங்களின் பிள்ளைகள் 39 வீதமானவர்கள் பரீட்சைக்கு தோற்றி அதில் 59 வீதமானவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
2020 பரீட்சையில் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களின் பிள்ளைகள் 63 வீதமானவர்கள் தோற்றியுள்ளனர். அதில் 37 வீதமானவர்களே சித்தியடைந்துள்ளனர். ஆனால் வருமானம் கூடிய குடும்பங்களின் பிள்ளைகள் 37 வீதமானவர்கள் கலந்துகொண்டதில் 63 வீதம் சித்தியடைந்துள்ளனர்.
ஏனெனில் 2020 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெற்ற காலத்தில் வசதி படைத்த குடும்பங்களின் பிள்ளைகளுக்கு படிப்பதற்கு தேவையான மடிக்கணனி மற்றும் தொழிநுட் வசதிகள் இருந்தன. வருமானம் குறைந்த மாணவர்களுக்கு அந்த வசதிகள் இருக்கவில்லை. அதனால் இந்த பரீட்சையை வருமானம் குறைந்த குடுபங்களின் மாணவர்களை இலக்கு வைத்து நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் கிராமப்புரங்களில் அரச பாடசாலைகளில் ஆரம்ப பிரிவுகளில் பாடசாலை நேரங்களில் ஆசிரியர்கள் பாடங்களை நடத்தாமல், மாலை நேர வகுப்புக்கு மாணவர்கள் கட்டாயப்படுத்தி அழைக்கப்படுகின்றனர். இதனால் வசதி குறைந்த மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனால் அரச பாடசாலை ஆசிரியர்கள் தொடர்பாகவும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் மாணவர்களுக்கு டெப் வசதிகளை வழங்குவதற்கு எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. வை பைவ் வலயங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தது. அப்போது எம்மை கொச்சைப்படுத்தினர். எமது நாட்டுக்கு இது பொருத்தமில்லை என்றார்கள்.
ஆனால் தற்போது நாடு எதிர்கொண்டுள்ள கொராேனா வைரஸ் தாக்கத்தில் டெப் வசதி இருந்திருந்தால் அனைத்து மாணவர்களும் கஷ்டமின்றி கல்வியை தொடர்ந்திருப்பார்கள். அதனால் தற்போதாவது அரசாங்கம் இந்த வசதிகளை மாணவர்களுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment