ஜனாதிபதிக்கு வாக்களித்தவர்கள் இப்போது 'சேர் பெயில்' என பரவலாகக் கூறுகின்றனர் - தமிழ், முஸ்லிம்களை ஒடுக்கும் வகையில் இனவாதத்தை விதைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது : மங்கள சமரவீர - News View

About Us

About Us

Breaking

Monday, December 21, 2020

ஜனாதிபதிக்கு வாக்களித்தவர்கள் இப்போது 'சேர் பெயில்' என பரவலாகக் கூறுகின்றனர் - தமிழ், முஸ்லிம்களை ஒடுக்கும் வகையில் இனவாதத்தை விதைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது : மங்கள சமரவீர

(நா.தனுஜா)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு வாக்களித்தவர்கள் இப்போது, 'தோல்வியடைந்த ஜனாதிபதி' என்று பரவலாகக்கூறி வருகின்றார்கள். அதன் மூலம் வெளிப்படுவது கோத்தாபய ராஜபக்ஷ தோற்று விட்டார் என்பதல்ல. மாறாக அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினரின் கொள்கைகள் தோல்வியடைந்துவிட்டன என்பதேயாகும் என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மாத்தறையில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று சுமார் ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ளது. அந்தத் தேர்தலில் நான் கடந்த 32 வருடங்களாகப் பிரதிநிதித்துவப்படுத்திய மாத்தறை மக்கள் ஏனைய பெரும்பான்மை மக்களோடு இணைந்து கொண்டனர். அதன் காரணமாக நான் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த மாத்தறையில் போட்டியிட்ட வேட்பாளரும் அதன் விளைவாக நானும் பாரிய தோல்வியைச் சந்திக்கும் நிலையேற்பட்டது. 

கம்பெரலிய உள்ளிட்ட செயற்திட்டங்களின் ஊடாக நாம் மாத்தறையில் பெரும் அபிவிருத்தியை ஏற்படுத்தியதோடு, மேலும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் திட்டமிட்டிருந்தோம். மாத்தறைக்கு மாத்திரமன்றி பருத்தித்துறை முனையிலிருந்து தேவேந்திர முனை வரையில் அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தோம்.

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் 2015 இல் நாம் எமக்கென ஒரு ஜனாதிபதியை நியமித்துக் கொண்டோம். எது எவ்வாறிருப்பினும் அவரைப் பதவியில் வைத்துக் கொண்டே சுகாதார, கல்வி, கைத்தொழில் அமைச்சர்கள் பல்வேறு முன்னேற்றகரமான செயற்திட்டங்களை முன்னெடுத்தனர்.

ஆனால் ராஜபக்ஷாக்கள் முறையற்ற விதத்திலேயே தொடர்ந்து செயலாற்றி வந்தபோதிலும், இந்நாட்டு மக்கள் அவர்களுக்கு வாக்களித்து மிகப்பாரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்கள். தனிச் சிங்கள அரசாங்கமொன்றையும் நாட்டையும் அமைப்போம் என்ற அவர்களது கோஷத்தின் கீழ் மக்கள் ஒன்றிணைந்தார்கள்.

ஒட்டு மொத்த நாட்டிற்கும் ஒரே சட்டத்தை வகுக்கக் கூடிய, ஊழலை ஒழிக்கும் வகையிலான தீர்மானங்களை மேற்கொள்ளக் கூடிய தலைவரொருவர் வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருந்தது. அதனடிப்படையிலேயே அவர்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்தி, புதிய ஜனாதிபதியொருவரை நியமித்துக் கொண்டார்கள்.

எனினும் இவற்றைச் செய்வதற்கு தனக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்பலம் வேண்டும் என்றும் சுயாதீன ஆணைக்குழுக்களுடன் நாட்டை சீராக்க முடியாது என்றும் ஆளுந்தரப்பு கூறியதற்கிணங்க, மக்கள் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் சிக்கலின்றிப் பெற்றுக் கொடுத்தார்கள். 

தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறையின் காரணமாகவே அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றது. மாறாக ஆசனங்களின் அடிப்படையிலான முறை காணப்படுமாயின், அரசாங்கம் இதனையும் விட மிகப்பாரிய வெற்றியைப் பெற்றிருக்கும்.

மேற்கண்டவாறு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவை விடவும் மிகவும் பலம்பொருந்திய அரசாங்கமொன்றை அமைத்துக் கொண்டு, முதலாவதாக அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் ஊடாக பாராளுமன்றத்தின் அதிகாரங்களை நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு வழங்கி, அந்தப் பதவியை மேலும் பலப்படுத்தினார்கள்.

ஆனால் தற்போது அரசாங்கம் முழுவதும் குழப்பகரமானதொன்றாக மாறியிருக்கிறது. ஒருபுறம் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியைக் கட்டுப்படுத்த முடியாத நிலையேற்பட்டிருக்கிறது. மறுபுறம் இதுவரை காலமும் இல்லாத வகையில் நாட்டின் பொருளாதாரம் மிகப் பாரியதொரு நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கிறது.

சட்டத்தின் ஆட்சியும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருக்கிறது. சட்டம் என்பது சாதாரண மக்களுக்கு ஒரு விதமாகவும், மஹிந்த ராஜபக்ஷவுடன் தொடர்புடைய தரப்பினருக்கு மற்றொரு விதமாகவும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இந்நிலையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு வாக்களித்தவர்கள் இப்போது, 'சேர் பெயில்' (தோல்வியடைந்த ஜனாதிபதி) என்று பரவலாகக்கூறி வருகின்றார்கள். அதன்மூலம் வெளிப்படுவது கோட்டாபய ராஜபக்ஷ தோற்றுவிட்டார் என்பதல்ல. மாறாக அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினரின் கொள்கைகள் தோல்வியடைந்துவிட்டன என்பதேயாகும். 

ஆகவே கோட்டாபய ராஜபக்ஷவின் மீது மாத்திரம் குற்றஞ்சுமத்திவிட்டு, அவரைப் போன்று சிந்திக்கின்ற ஒருவரை ஆட்சிபீடத்தில் ஏற்றுவதால் இதற்குத் தீர்வுகாண முடியாது.

சுதந்திரத்திற்கு முன்னரிருந்தே எமது நாடு அரசியல், பொருளாதார, சமூக, கலாசார ரீதியில் மிகவும் முன்னேற்றமடைந்த நாடாகவே காணப்பட்டது. எனினும் 1956 ஆம் ஆண்டிலிருந்தே நாடு பின்நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது. 

அப்போதைய பிரதமர் பண்டாரநாயக்க மீது நான் குறை கூறுகின்றேன் என்று கருதக்கூடாது. பண்டாரநாயக்கவின் குடும்பத்தை இலங்கையில் உருவான மிகவும் நேர்மையான ஒரு அரசியல் குடும்பம் என்று நான் கூறினாலும், பண்டாரநாயக்கவின் காலகட்டத்திலேயே இனவாத அடிப்படையில் இந்த நாடு பின்நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. எஸ்.டிபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க பிரதமராவதற்காக இந்த நாட்டிற்குள் பௌத்த மதத்தின் பெயரால் மிக மோசமான இன மற்றும் மதவாத அடிப்படையொன்றை உருவாக்கினார். 

அதேபோன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொண்ட அனைத்து அரசாங்கங்களுமே இந்த நாட்டிற்கு செய்த சேவையை விடவும் அநியாயங்கள்தான் அதிகமானவையாகும். ஆகவே எதிர்காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷ இல்லாமல் வேறொருவர் ஜனாதிபதியானாலும் தற்போதைய நிலையே தொடரும். ஆகவே உண்மையில் எமக்குத் தேவைப்படுவது இப்போது காணப்படும் இன, மத ரீதியான சிந்தனைக்கு மாற்று சிந்தனையேயாகும். 

சிறுபான்மையினத்தவர் உள்ளடங்கலாக அனைவரினதும் உரிமைகளை உறுதி செய்யும் விதமான சட்ட மற்றும் சமூகக்கட்டமைப்பொன்று அவசியமாகும். நாம் சிங்களவர்கள் என்றும் இது பௌத்தபூமி என்றும் கூறி, இங்கு பல்லாயிரம் வருடங்களாக இருக்கும் தமிழர்களை, முஸ்லிம்களை ஒடுக்கும் வகையில் இனவாதத்தை விதைப்பது ஒருபோதும் ஏற்றக் கொள்ளப்பட முடியாததாகும் என்றார்.

No comments:

Post a Comment