(எம்.மனோசித்ரா)
நாட்டில் தற்போது முதியோர் பற்றி கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. முகத்துவாரம் முதியோர் இல்லத்தில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதைப் போன்று ஏனைய பகுதிகளில் இடம்பெறாமலிருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறில்லை என்றால் ஏனைய நாடுகளைப் போன்று முதியவர்களின் உயிரிழப்புக்கள் அதிகரிக்கக்கூடும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், உலகலாவிய ரீதியில் நாம் எந்த கட்டத்தில் இருக்கின்றோம் என்பதை அறிந்து அதற்கேற்ப முன்னோக்கிச் செல்ல வேண்டும். எதிர்காலத்தில் மிகவும் அபாயமான சூழலை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றோம்.
முன்னரை விட 70 சதவீதம் வைரஸ் பரவல் உலக நாடுகளில் அதிகரித்துள்ளது. குளிர் காலம், பண்டிகைக் காலம் ஆரம்பித்துள்ள நிலையில் முதலாம் அலையை விட இரண்டாம் அலையில் பாதிப்புக்கள் அதிகமாகவே காணப்படும் என்பதால் ஐரோப்பிய நாடுகள் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்துள்ளன.
சுவிஸர்லாந்து, ஸ்பெயின், ஜேர்மன், இத்தாலி போன்ற நாடுகள் தற்போதிலிருந்தே போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்துள்ளன. உலகலாவிய ரீதியில் அவதானிக்கும் போது முதலாம் அலையை விட இரண்டாம் அலையில் தொற்றாளர்களும் மரணங்களும் அதிகரித்த போக்கினையே காண்பிக்கிறது.
இலங்கையில் 60 வயதிற்கும் குறைவான அதாவது மத்திம வயதிலுள்ள நபர்களும் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இதேவேளை நாளொன்றுக்கு இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையை விட அதிகமானோர் குணமடைகின்றமை முன்னேற்றமான நிலைமையாகும். எனவே இதேபோன்று உரிய நேரத்தில் சரியான தீர்மானங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
தீவிர சிகிச்சை பிரிவு தொடர்பில் சுகாதார அமைச்சு அவதானம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களை இனங்காணும் செயற்பாடு எல்லா சந்தர்ப்பங்களிலும் சுகாதாரதரப் பிரிவினரின் கட்டுப்பாட்டுக்குள் காணப்பட வேண்டும். அவ்வாறில்லை என்றால் வைரஸ் பரவல் கட்டுப்பாடும் கைமீறிச் செல்லக் கூடும்.
இலங்கையில் தற்போது வைரஸ் பரவலானது கொழும்பு மாநகர சபையை அண்மித்ததாகவே காணப்படுகிறது. இதேபோன்று முழு நாட்டிலும் இனங்காணப்படும் தொற்றாளர்களில் 74 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே இனங்காணப்படுகின்றனர். எஞ்சிய 26 சதவீதமானோல் வௌ்வேறு மாவட்டங்களில் இனங்காணப்படுகின்றனர். இந்த எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது.
கொழும்பின் நிலை இவ்வாறிருக்க தற்போது களுத்துறை மாவட்டத்தில் கிளை கொத்தணிகள் உருவாகியுள்ளன. பண்டாரகம, அட்டலுகம ஆகிய பிரதேசங்களில் நேரடியாக அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். புளத்சிங்கள மற்றும் பேருவளை ஆகிய பகுதிகளிலும் அண்மையில் புதிய தொற்றாளர்கள் இனங்காணப்படுகிறார்கள். களுத்துறையில் தற்போது நாளொன்றுக்கு 100 தொற்றாளர்கள் இனங்காணப்படுகிறார்கள். திருகோணமலையிலும் தற்போது அபாய நிலை ஆரம்பித்துள்ளது.
இவ்வாறான நிலைமை தொடர்பில் விசேட அவதானம் செலுத்த வேண்டும். முதியோர் இல்லங்கள் தொடர்பிலும் அதிக அவதானம் செலுத்த வேண்டும். அவ்வாறில்லை என்றால் ஏனைய நாடுகளைப் போன்று முதியோர் மரணங்கள் அதிகரிக்கக் கூடும். அதனை தவிர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நகர் பகுதிகள் மாத்திரமின்றி கிராம புறங்களிலும் புதிய தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். இவ்வாறான நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவு அதிகரிக்கப்பட வேண்டும். அதேவேளை அவற்றின் முடிகளையும் துரிதமாக பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும்.
வறுமைக் கோட்டிலுள்ள நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக் கொடுக்க உலக சுகாதார ஸ்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும். இலங்கையில் மொத்த சனத் தொகையில் 20 சதவீதமானோருக்கு அதனை இலவசமாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையையும் நாம் வரவேற்கின்றோம். அதற்கிடையில் வேறு எந்தவொரு மருந்தின் மீதும் நம்பிக்கை வைத்து ஏமாற வேண்டாம் என்பதை மக்களுக்கு நினைவுபடுத்துகின்றோம்.
தற்போது விமான நிலையம் திறக்கப்படவுள்ளது. சுற்றுலாத்துறை ஆரம்பிக்கப்படவுள்ளது. இவ்வாறான சூழலில் மக்கள் அனைவரும் அவர்களது பொறுப்பை முறையாக நிறைவேற்ற வேண்டும். காரணம் எதிர்வரும் வாரங்களில் இதனை விட பாரிய பாதிப்புக்களுக்கு முகங்கொடுக்க நேரிடும்.
தனிமைப்படுத்தல் சட்ட விதிகள் மாத்திரமின்றி மதுபானசாலைகள், புகைப் பொருட்கள் தொடர்பில் உரிய தீர்மானம் அறிவிக்கப்பட வேண்டும். 2021 ஐ 2020 ஐ விட சிறந்ததாக்குவதா அல்லது அதனை விட மோசமாக்குவதா என்பதை மக்களின் பொறுப்பான செயற்பாடுகளே தீர்மானிக்கும்.
No comments:
Post a Comment