புரவி சூறாவளியினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்கும், பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான உடனடி வசதிகளை செய்து கொடுப்பதற்கும் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்தார்.
முப்படையினர் மற்றும் பொலிஸார் உஷார் நிலையிலுள்ள அதேசமயம், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுடன் இணைந்து தேவையான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு வடக்கு, கிழக்கு மற்றும் வன்னி பிரதேசங்களுக்கு பொறுப்பான பாதுகாப்பு படைகளின் தளபதிகளுக்கு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புரவி சூறாவளி, கிழக்கு கடற்பகுதி ஊடாக இலங்கையை நோக்கி வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இதனால் ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம அந்தந்த பிரதேசங்களிலுள்ள மாவட்டச் செயலாளர்கள் ஊடாக தேவையான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது என்றார்.
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன விடுத்துள்ள விஷேட அறிவித்தலில் மேலும் குறிப்பிடுகையில்.
இந்த சூறாவளியினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதும், பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான வசதிகளை உடனடியாக செய்து கொடுப்பதுமே எமது நோக்கமாகும். இதற்கமைய இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆலோசனைகளும் அறிவுறுத்தல்களும் பாதுகாப்பு படையினருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
எனவே தான் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம். மாவட்டச் செயலாளர்கள், அந்தந்த பிரதேசங்களுக்கு பொறுப்பான பாதுகாப்பு படைகளின் தளபதிகள், முப்படையினர், சிரேஷ்ட பொலிஸ் உயர் அதிகாரிகள், சுகாதாரதுறை அதிகாரிகளுடன் தொடர்பை பேணி உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் என்று பாதுகாப்புச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
ஸாதிக் ஷிஹான்
No comments:
Post a Comment