(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
நுவரெலியா வலயத்தில் சுமார் 307 தமிழ் மொழி மூல பாடசாலைகள் உள்ளன. ஆனால் தேசிய பாடசாலையாக ஒன்றுமே அங்கீகரிக்கப்படவில்லை. இந்த அரசாங்கமாவது இதனை கருத்தில் கொண்டு நுவரெலியா கல்வி வலயத்திற்கு தமிழ் மொழி மூல தேசிய பாடசாலையை உருவாக்கித்தர வேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் உதய குமார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை 2021 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் கல்வி அமைச்சு, இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் கல்விக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும். எமது நாட்டில் ஆசிரியர் நியமனங்களில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்ட வேளையில் எவரும் அதனை கண்டுகொள்ளாதிருந்த வேளையில் எதிர்க்கட்சியின் சார்பில் பிரேரணை ஒன்றை கொண்டுவந்து கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தோம். கல்வி அமைச்சரும் இதனை கருத்தில் கொண்டு உதவி ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனத்திற்கான நடவடிக்கைகளை ஏற்படுத்திக் கொடுத்தார். இதற்கு நன்றிகளை தெரிவித்தாக வேண்டும்.
அதேபோல் நுவரெலியா மாவட்டத்தில் கல்வி சார் பிரச்சினைகள் பல குவிந்து கிடக்கின்றன. இதில் தமிழ் மொழி மூல தேசிய பாடசாலை என்பது எட்டாக்கனியாகவே எமக்கு இருக்கின்றது. கடந்த ஆட்சியில் தமிழ் மொழி மூல தேசிய பாடசலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் அரசியல் தலையீடுகள் காரணமாக அதனை முன்னெடுக்க முடியாது போய்விட்டது. நுவரெலியா மாவட்டத்தை பொறுத்த வரையில் கல்வியில் அதிகளவிலான அரசியல் தலையீடுகள் காணப்படுகின்றன. இதனை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
நுவரெலியா மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் எட்டு தேசிய பாடசாலைகள் காணப்படுகின்றன. அதில் ஒரு தேசிய பாடசாலை கூட தமிழ் மொழியில் இல்லை என்பது கவலைக்கிடமான விடயமாகும். நுவரெலியா வலயத்தில் சுமார் 307 தமிழ் மொழி மூல பாடசலைகள் உள்ளன. ஆனால் தேசிய பாடசாலையாக ஒன்றுமே அங்கீகரிக்கப்படவில்லை. எனவே இப்போதாவது தேசிய பாடசாலைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. அதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதேபோல் தோட்டப்புற பாடசாலைகளுக்கான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். முறையான கட்டிடங்கள் இல்லாதமை பாரிய பிரச்சினைகளாக காணப்படுகின்றது. அதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அத்துடன் எமது மாவட்டங்களில் மாணவர்களின் இடைவிலகல் அதிகளவில் காணப்படுகின்றன. அதனையும் தீர்க்க வேண்டும். அத்துடன் பல்கலைக்கழகம் ஒன்றினை நுவரெலியா மாவட்டத்தில் உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனை நாம் வரவேற்கிறோம். கல்வி அமைச்சரின் மேற்பார்வையில் அதனையும் முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment