சிறைச்சாலைகளில் நெருக்கடிகளை குறைக்க 607 பேருக்கு பொது மன்னிப்பும், மேலும் சிலருக்கு விரைவாக பிணை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம் - நீதி அமைச்சர் அலி சப்ரி - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 1, 2020

சிறைச்சாலைகளில் நெருக்கடிகளை குறைக்க 607 பேருக்கு பொது மன்னிப்பும், மேலும் சிலருக்கு விரைவாக பிணை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம் - நீதி அமைச்சர் அலி சப்ரி

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

சிறைச்சாலைகளில் இடம்பெற்றுவரும் நெருக்கடிகளை குறைக்க 607 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கவும் மேலும் சிலருக்கு விரைவாக பிணை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. அத்துடன் மஹர சிறைச்சாலை கலவரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை ஒரு வார காலத்தில் கிடைக்கும் என நீதி அமைச்சர் அலி சப்ரி உறுதியளித்தார்.

பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. 

பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்றதன் பின்னர், சிறைச்சாலைகளில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமையில் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி நெருக்கடி நிலைமையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தைத் தொடர்ந்து பல நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்திருக்கின்றது. குறிப்பாக பொலிஸாருடன் சட்டமா அதிபருடன் கதைத்து அவர்களை பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். 

அதேபோன்று சிறைச்சாலையில் இருக்கும் 607 பேர் வரையானவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.

அத்துடன் கைதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் குற்றப்பத்திரிகைகளை மாற்றியமைத்து, அவர்களின் வழக்குகளை விரைவாக விசாரிக்கும் வரை அவர்களை பாதுகாப்பான இடங்களில் வைப்பது போன்ற பல நடவடிக்கை தொடர்பில், ஜனாதிபதி தலைமையில் அதிகாரிகள் மட்டத்தில் நேற்று (நேற்று முன்தினம்) இடம்பெற்ற கலந்துரையாடலின்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக எடுக்க முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.

அத்துடன் பிணை வழங்கினாலும் அவர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும். அப்போது அவர்களை வேறு இடமொன்றில் தனிமைப்படுத்துவதா அல்லது அவர்களின் வீடுகளிலே தனிமைப்படுத்துவதா என தற்போது தீர்மானித்து வருகின்றோம். 

அதேபோன்று பிணை வழங்க முடியாதவர்களை அவர்களின் சொந்தப் பிணையில் செல்ல 3 மாதம் வழங்குவோம். நாங்கள் செய்யக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.

மேலும் மஹர சிறைச்சாலை கலவரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கின்றது. ஒரு வாரத்தில் இது தொடர்பான இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் 3 மாதங்களில் முழுமையான அறிக்கையை கையளிக்குமாறும் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அறிக்கை கிடைத்ததுடன் அதனை சபைக்கு சமர்ப்பிப்போம் என்றார்.

No comments:

Post a Comment