(எம்.மனோசித்ரா)
நாட்டின் 24 மாவட்டங்களிலும் கொவிட் கிளை கொத்தணிகள் ஏற்படக்கூடிய எச்சரிக்கை நிலவுவதாக தெரிவித்துள்ள சுகாதார தரப்பு மேல் மாகாணம் அதிகளவு தொற்றாளர்கள் இனங்காணப்படக் கூடிய பகுதி என்பதால் அதனை தொடர்ந்தும் முடக்குவதற்கும் தீர்மானித்துள்ளது. இவ்வாறானதொரு நிலையில் பாதுகாப்பு துறையினரும் தொற்றுக்குள்ளாகியுள்ளமையும் அதிகரித்துள்ளது.
மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகள் தொடர்ந்தும் காணப்படுகின்ற நிலையில் அவற்றுக்கு சமாந்தரமான வேறு கொத்தணிகள் பிரிதொரு இடத்தில் உருவாகக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. அவ்வாறு ஏற்பட்டால் எம்மால் அதனைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமையே ஏற்படும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் பெருமளவானோர் சமூகத்திலிருந்தே இனங்காணப்படுகின்றனர். தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து அல்ல. இவ்வாறான நிலைமையை சீராக்குவதற்கு துதிரமான செயற்பாடுகளை முன்னெடுத்தால் மாத்திரமே எதிர்காலத்தை சிறந்ததாக்கலாம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்க செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.
125 பொலிஸ் அதிகாரிகளுக்கு தொற்றுறுதி
இதேவேளை, வைரஸ் தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 125 ஆக உயர்வடைந்துள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் றோஹன தெரிவித்தார். அத்தோடு 2400 பொலிஸ் அதிகாரிகள் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரையான காலப்பகுதிக்குள் எந்தவொரு பொலிஸ் அதிகாரியும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகவில்லை. எனினும் கொழும்பு விசேட பொலிஸ் அதிரடிப்படை முகாம்களில் சமையலறையில் உள்ளவர்கள் பேலியகொடை மீன் சந்தைக்கு மீன் வாங்குவதற்கு சென்றதையடுத்தே பொலிஸ் அதிகாரிகளும் தொற்றுக்குள்ளாகினர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேல்மாகாணத்திலிருந்து சென்ற 550 பேர் தனிமைப்படுத்தலில்
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் மேல் மாகாணத்திலிருந்து வெளிப்பிரதேசங்களுக்குச் சென்ற 550 தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் குறித்த பிரதேசங்களுக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர்களின் கணிகாணப்பின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment