கடந்த ஆறு மாதங்களில், வெளிநாடுகளிலிந்து திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக அடையாளம் காணப்பட்ட 11 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரவு தெரிவித்துள்ளது.
சட்டங்களை நடைமுறைப்படும் பிரிவினர் மற்றும் சர்வதேச பொலிஸாருக்குமிடையிலான ஒருங்கிணைந்த முயற்சிகள் காரணமாக, கடந்த ஆறு மாதங்களில் திட்டமிட்ட குற்றச்செயல் குழுக்களின் உறுப்பினர்களாக அடையாளம் காணப்பட்ட 11 பேரே இவ்வாறு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அழைத்துவரப்பட்ட சந்தேகநபர்கள் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் போதைப் பொருள் கடத்தல், நிதி குற்றங்கள், ஆட்களை மிரட்டி பணம் பறித்தல் மற்றும் திட்டமிடப்பட்ட வன்முறை சம்பவங்கள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்த உறுப்பினர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சில தனி நபர்கள் உள்ளடங்கியிருப்பதாகவும் இவர்கள் குறித்த விசாரணைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து செயற்படும் நாடு கடந்த குற்றவியல் வலையமைப்புகளை தகர்த்தெறியும் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிக்கையில், இத்தகைய குழுக்கள் பல ஆண்டுகளாக குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு உதவிய உள்கட்டமைப்பு மற்றும் ஆதரவு அமைப்புகள் இரண்டிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும், மொத்த மற்றும் சில்லறை வலையமைப்புகளை நாங்கள் முடிவுக்குக் கொண்டுவருவோம்.
அண்மைய துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் குற்றவியல் குழுக்களுக்குள்ளும் அவற்றுக்கு இடையேயான மோதல்களுடன் தொடர்புடையவையாகும். அவற்றில் பல, முன்னர் அரசியல் பாதுகாப்புடனான நடவடிக்கை என கருதப்படக்கூடியவை.
நாட்டில் அண்மையில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் பல்வேறு உத்திகள் மூலம் மேற்கொள்ளப்படுவதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
சில சந்தர்ப்பங்களில், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர்கள் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவருக்கிடையில் எந்த தொடர்போ அறிமுகமோ இல்லை.
இவ்வாறான தாக்குதல்களுக்கான ஆயுதங்கள் மூன்றாம் தரப்பினர் மூலம் பெறப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. இத்தகைய குற்றச் செயல்களை முற்றாகத் தடுக்க திட்டமிட்ட நடவடிக்கையில் அமைச்சு கவனம் செலுத்தி செலுத்தி வருகிறது.
இதற்காக எல்லை கண்காணிப்பை வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக கடலோரப் பாதைகள் ஊடாக நாட்டிற்குள் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி போதைப்பொருளினால் அடிமைப்பட்டுள்ள நபர்களுக்கான சமூக அளவிலான விழிப்புணர்வு மற்றும் மறுவாழ்வு முயற்சிகளையும் அளிக்க அமைச்சு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment