புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை வகுப்பதற்கு பொதுமக்களின் கருத்துக்களைப் பெற நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, இந்த சட்டமூலம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை இம்மாதம் 16 ஆம் திகதி முதல் எதிர்வரும் 14 நாட்களுக்குள் அனுப்பி வைக்குமாறு அமைச்சு அறிவித்துள்ளது.
பொதுமக்கள் தமது ஆலோசனைகளை, ‘பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கான முன்மொழிவுகள்’ என தலைப்பிட்டு, செயலாளர், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு, இலக்கம், 19 ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு 10 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நடைமுறையிலுள்ள 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்து, அதற்குப் பதிலாக புதிய சட்ட மூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
புதிய சட்ட மூலத்தை அறிமுகப்படுத்துவதன் நோக்கம் நவீன உலகளாவிய பயங்கரவாத சவால்களை எதிர்கொள்வது, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தனி நபர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளைக் கடைப்பிடிப்பதாகும்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment