நாட்டின் ஏற்றுமதியில் பாரிய கொள்வனவை மேற்கொள்ளும் நாடு அமெரிக்காவாகும். இந்த கொள்வனவு நடவடிக்கைகள் தற்போது தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பிலான உடன்படிக்கை மற்றும் புரிந்துணர்வு தொடர்பில் மேலும் பேச்சுவார்த்தையை அமெரிக்காவுடன் நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளரும் கெஹெலிய ரம்பக்வெல்ல தெரிவித்தார்.
நாட்டிற்கு பயனுள்ளதாக இருந்தாலும் நாட்டின் இறைமைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத உடன்படிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு ZOOM தொழில் நுட்பத்தின் உதவியுடன் இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (27) இடம் பெற்றது.
இதன்போது அமெரிக்க இராஜாங்க செயலாளருடன் எம்.சி.சி. உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படுமா? என ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
பதிலளித்த அமைச்சர் நாட்டின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு உடன்படிக்கையோ பேச்சுவார்த்தையோ நடக்காது என்று அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
அமெரிக்காவுடனான வர்த்தக தொடர்புகளையிட்டு மகிழ்ச்சியடைய முடியும். அதனை மேலும் அதிகரிப்பதற்கு இராஜாங்க செயலாளரின் விஜயத்தின் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
உடன்படிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் இரு தரப்பு உடன்படிக்கைகள் மற்றும் புரிந்துணர்வு பெரும்பாலும் பொருளாதாரம், சமூக வேலைத்திட்டங்களில் மாத்திரமே மேற்கொள்ளப்படும். வேறு எந்தவித விடயம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படமாட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment