(எம்.மனோசித்ரா)
மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
மாத்தறையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், மிகச் சிறந்த ஆளுமையுடைய கோத்தாபய ராஜபக்சவால் தனித்து சிறந்த ஆட்சியை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் ஆட்சிக்கு வந்தால் மாத்திரமே எம்.சி.சி. ஒப்பந்தம் இரத்து செய்யப்படும் என்றும் போலியான வாக்குறுதிகளை வழங்கியே ராஜபக்சக்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.
ஆனால் தற்போது அதனை மறந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தால் மாத்திரமே சேவையாற்ற முடியும் என்று கூறுகின்றனர். மீண்டும் மீண்டும் இவ்வாறான போலியான வாக்குறுதிகளுக்கு ஏமாற வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.
கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் மத்திய வங்கி பிணை முறி ஊழலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. எனினும் தற்போது அந்த வாக்குறுதிகள் புறந்தள்ளப்பட்டுள்ளன. மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வது மாத்திரமே இவர்களது இலக்காகவுள்ளது.
தற்போது கொரோனா பரவலைக் கொண்டு அரசியல் செய்ய ஆரம்பித்துள்ளனர். ஒரு சந்தர்ப்பத்தில் கொரோனா பரவல் உள்ளதாகக் கூறுகின்றனர். பிரிதொரு சந்தர்ப்பத்தில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். இதனை தேர்தல் பிரசார மேடைகளில் பிரதான பேசு பொருளாக்கியுள்ளனர்.
தனியார் வகுப்புக்களை நடத்தும் ஆசிரியர்களையும், ஆரம்ப பாடசாலை மாணவர்களையும் அழைத்து கலந்துரையாடுகின்றனர். ஒரே சந்தர்ப்பத்தில் 500 மாணவர்களுக்கு கற்பிக்க வாய்ப்பளிக்கப்படும் என்று கூறுகின்றனர். இதன் மூலம் அவர்களது வாக்குகளைப் பெற்றுக் கொள்ள எண்ணுகின்றனர் என்றார.
No comments:
Post a Comment