(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் நிதி கிடைக்கப் பெற்றதாக எம்மிடம் தகவல்கள் உள்ளபோதும், அரசாங்கம் 1.9 மில்லியன் டொலர் நிதி கிடைக்கப் பெற்றதாகவே கூறுகின்றது. வைரஸ் பரவலின் இரண்டாவது அலையை எதிர்கொள்வதற்குத் தயாராக வேண்டிய தற்போதைய சூழ்நிலையில், நாட்டிற்கு கிடைக்கப் பெற்ற நிதி மற்றும் அதன் செலவின விபரங்களை அரசாங்கம் உடனடியாக பகிரங்கப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று புதன்கிழமை கட்சியின் தொடர்பாடல் தொழில்நுட்பப் பிரிவினருடன் மேற்கொண்ட விசேட சந்திப்பிலேயே அவர் இவ்விடயங்கள் தொடர்பில் பகிர்ந்துகொண்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது, இரண்டாவது அலை ஏற்படுவதைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் தவறி வருகின்றது. ஆகவே இந்த நெருக்கடி நிலைக்கு முகங்கொடுக்கத்தக்க முறையான திட்டமிடல் இல்லாத தற்போதைய அரசாங்கத்தை நீக்கி, அதனை எதிர்கொள்ளத்தக்க ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அமைப்பதற்கு எதிர்வரும் பொதுத் தேர்தலின் ஊடாக வாய்ப்பேற்படுத்திட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இன்றளவில் நாட்டிலுள்ள அனைத்து அரசியல்வாதிகளின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளமையே மிகப்பாரிய பிரச்சினையாகும். மக்கள் முகங்கொடுத்துள்ள பொருளாதாரப் பிரச்சினைகள், அவர்களின் எதிர்காலம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கும் யாரிடம் தீர்வு இருக்கிறது என்று கேள்வி எழுப்புகின்றார்கள். எனவே இந்தப் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வை வழங்குவது என்பது தொடர்பில் நாம் ஆராய வேண்டும்.
நிகழ்காலத்தில் நாமனைவரும் பாரியதொரு சுகாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கிறோம். இதற்குக் காரணம் கொவிட் - 19 கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலாகும். எமக்கு மாத்திரமன்றி உலக நாடுகள் அனைத்திற்கும் இது பொதுவான பிரச்சினையாக மாறியிருக்கிறது. அவ்வாறிருக்கையில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலையைத் தடுப்பதே நாட்டு மக்கள் ஒவ்வொருவரினதும் தற்போதைய கடமையாகும். வைரஸ் பரவலின் இரண்டாவது அலை ஏற்படுமாக இருந்தால் நாட்டின் பொருளாதாரம் போன்றே சமூக செயற்பாடுகளும் பெருமளவில் பாதிப்படையும். மீண்டும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இயலாத நிலையேற்படும்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இங்கிலாந்தின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிப்படைந்திருக்கிறது. அந்த நாட்டினாலேயே இதிலிருந்து மீள முடியாவிட்டால் எம்மால் எவ்வாறு மீட்சியடைய முடியும்? எனவே கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை ஏற்படுவதை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்து சிந்திக்க வேண்டும். வைரஸ் பரவலின் முதலாவது அலையின் போது அதனைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான உத்தரவுகளை ஜனாதிபதி பிறப்பித்ததுடன் மேலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நாமும் அதில் பல்வேறு யோசனைகளை முன்வைத்தோம். அதனால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சி வெற்றி கண்டது.
இந்த நடவடிக்கைகளில் எமது யோசனைகள் செயற்படுத்தப்பட்டமையால் நாம் அதனை எதிர்க்கவில்லை. அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களின்படி செயற்படுமாறே நாமும் மக்களிடம் கோரிக்கை விடுத்தோம். எனினும் அவ்வாறு செயற்படுகையில், நாங்கள் அரசாங்கத்துடன் டீல் மேற்கொண்டிருப்பதாக சில தரப்பினர் குற்றஞ்சாட்டினர். மக்களின் சுகாதாரப் பிரச்சினையைக் கருத்திற்கொண்டு, அதற்குத் தீர்வு காண்பதற்கான மாற்று யோசனையை முன்வைப்பது அரசாங்கத்துடன் டீல் செய்து கொள்வதாகாது. நான் நாட்டு மக்களுடனேயே டீல் செய்துகொண்டேன்.
ஆனால் தற்போது அரசாங்கத்தின் செயற்பாடுகளை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. முதலாவது அலை குறைந்துகொண்டு சென்றபோது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைள் தொடர்பிலும் நாங்கள் அரசாங்கத்திற்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினோம். பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்குமாறும் வலியுறுத்தினோம். எனினும் அவற்றில் ஒன்றையேனும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் 'அவசர சுகாதார நெருக்கடிகளின் போது மக்கள் மேற்கொள்ள வேண்டியவை' என்ற தலைப்பில் ஒரு கோவையைத் தயாரித்திருக்கின்றோம். இது சட்ட ரீதியானதன்று. எனினும் அதனை நிறைவேற்றிக் கொள்வதற்கு அரசாங்கம் எம்மிடம் கோரிக்கை விடுக்கவுமில்லை.
இப்போது கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை ஆரம்பமாகியிருக்கிறது. அதனை அமெரிக்கா எதிர்கொண்டிருக்கிறது. வூஹானுக்குப் பின்னர் தமது நாட்டில் எங்கேயும் கொரோனா வைரஸ் இல்லை என்று சீனா கூறியது. ஆனால் தற்போது அது பீஜிங்கிற்கும் பரவியிருக்கிறது. கொரோனா எமக்கு ஒரு பிரச்சினையே இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டார். ஆனால் இப்போது அங்கு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை இலட்சத்தைக் கடந்திருக்கிறது. இந்தியாவில் முதலாவது அலையை ஓரளவிற்குக் கட்டுப்படுத்த முடிந்திருந்தாலும் தற்போது புதுடில்லி, சென்னை, மும்பை ஆகிய பகுதிகளிலும் வைரஸ் வேகமாகப் பரவிவருகின்றது. கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை ஏற்படும் என்றே உலக சுகாதார ஸ்தாபனமும் எச்சரித்திருக்கிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை இனங்காண்பதற்கான பரிசோதனை மேற்கொள்ளும் எண்ணிக்கையை அதிகரிப்பது அவசியமாகும். இவற்றை முன்னெடுப்பதற்கு நிதியில்லை என்று கூறி காலத்தை வீணடிக்க வேண்டாம். உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவிப்பிற்குப் பின்னர் எமது நாட்டிற்கு 230 மில்லியன் டொலர் நிதி கிடைத்தது என்று நான் குறிப்பிட்டிருந்தேன்.
எனினும் உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்து 1.9 மில்லியன் டொலர் நிதி கிடைத்ததாக மாத்திரமே சுகாதார அமைச்சர் தெரிவித்திருக்கிறார். எனினும் எமது நாட்டிற்கு சுமார் 200 மில்லியன் டொலர் நிதி கிடைத்திருக்கிறது என்று நாங்கள் கண்டறிந்திருக்கிறோம். அவ்வாறில்லாவிடின் சரியான தொகை என்னவென்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.
அதுமாத்திரமன்றி பின்னர் பல்வேறு மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கும் நிதி கிடைத்தது. அதற்கு என்ன நேர்ந்தது. மருத்துவ உபகரணங்கள் ஏன் கொள்வனவு செய்யப்படவில்லை? ஏன் பரிசோதனைகள் மேற்கொள்ளும் அளவு அதிகரிக்கப்படவில்லை?கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலைக்கு முகங்கொடுப்பதற்கு நாம் இப்போதேனும் தயாராக வேண்டும். எனினும் அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் தவறி வருகின்றது.
ஆகவே இந்த நெருக்கடி நிலைக்கு முகங்கொடுக்கத்தக்க முறையான திட்டமிடல் இல்லாத தற்போதைய அரசாங்கத்தை நீக்கி, அதனை எதிர்கொள்ளத்தக்க ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அமைப்பதற்கு எதிர்வரும் பொதுத் தேர்தலின் ஊடாக வாய்ப்பேற்படுத்திட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment